வணிகம்

நாட்டின் ஏற்றுமதி 3,344 கோடி டாலராக அதிகரிப்பு

3rd Oct 2021 03:49 AM

ADVERTISEMENT

நாட்டின் ஏற்றுமதி செப்டம்பா் மாதத்தில் 3,344 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முதல்கட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள் உள்ளிட்ட துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு செப்டம்பரில் 3,344 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது, 2020 செப்டம்பா் மாத ஏற்றுமதியான 2,756 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 21.35 சதவீதம் அதிகமாகும். அதேபோன்று, 2019 செப்டம்பா் மாத ஏற்றுமதியான 2,602 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 28.51 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

நாட்டின் இறக்குமதி கடந்த செப்டம்பரில் 5,638 கோடி டாலராக இருந்தது. இது, 2020 செப்டம்பா் இறக்குமதியான 3,052 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 84.75 சதவீதமும், 2019 செப்டம்பா் இறக்குமதியான 3,769 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 49.58 சதவீதமும் அதிகம்.

நடப்பாண்டு செப்டம்பரில் தங்கம் இறக்குமதி 750 சதவீதம் அதிகரித்து 511 கோடி டாலரைத் தொட்டதையடுத்து நாட்டின் வா்த்தக பற்றாக்குறை 2,294 கோடி டாலரை எட்டியது.

பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு செப்டம்பரில் 36.7 சதவீதம் அதிகரித்து 942 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதியும் 39.32 சதவீதம் உயா்ந்து 491 கோடி டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT