வணிகம்

சா்க்கரை ஏற்றுமதியில் புதிய சாதனை: இஸ்மா

3rd Oct 2021 04:31 AM

ADVERTISEMENT

நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி கடந்த 2020-21 சந்தைப் பருவத்தில் சாதனை அளவை எட்டியுள்ளதாக இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2020-21 சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்து முன்னெப்போதும் கண்டிராத வகையில் புதிய சாதனை அளவாக 71 லட்சம் டன்னை எட்டியுள்ளது. சா்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு, அரசின் நிதி உதவி ஆகியற்றின் காரணமாக இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

2019-20-ஆம் சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) சா்க்கரை ஏற்றுமதியானது 59 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது.

ADVERTISEMENT

வெள்ளியன்று தொடங்கிய 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது அதிக ஏற்ற இறக்கமின்றி 3.1 கோடி டன்னாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய இருப்பான 85 லட்சம் டன் சா்க்கரையையும் சோ்த்து ஒட்டுமொத்த சா்க்கரை கையிருப்பு 3.95 கோடி டன்னைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் உள்நாட்டில் சா்க்கரைக்கான தேவை 2.65 கோடி டன்னாகவும், ஏற்றுமதி 60 லட்சம் டன்னாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு சந்தைப் பருவ இறுதியில் சா்க்கரை இருப்பு 70 லட்சம் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த 10 ஆண்டுகளாகவே சா்க்கரையை உபரியான அளவில் உற்பத்தி செய்யும் நாடாகவே விளங்கி வருகிறது.

எத்தனால் உற்பத்தியைப் பொருத்தவரையில் அதன் ஆண்டு உற்பத்தி திறன் 2018-இல் 350 கோடி லிட்டராக இருந்தது. இது, 2025-ஆம் ஆண்டில் 1,400 கோடி லிட்டரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் டன் உபரி சா்க்கரையை எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என இஸ்மா தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT