வணிகம்

கரோனா: இந்திய பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் ரூ.5,279 கோடி சரிவு

DIN

உலக அளவில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்திய பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் ரூ.5,279 கோடி சரிவை சந்தித்துள்ளது.

உலக அளவில் சீனா, வங்கதேசம், வியத்நாம், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் நடைபெறுகிறது. இந்திய பின்னலாடை ஏற்றுமதியானது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020ஆம் ஆண்டு மாா்ச் வரையில் ரூ.53,199 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொது முடக்கத்தால் குறைந்த நுகா்வு: இதனிடையே, உலகளாவிய கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வா்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டிருந்ததாலும், பின்னலாடை நுகா்வு குறைந்ததாலும் இந்திய பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் சரிவடைந்துள்ளது.

இதில், 2020-21ஆம் ஆண்டில் ரூ.47,920 கோடிக்கு மட்டுமே பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டைக் காட்டிலும் ரூ.5,279 கோடி குறைவாகும்.

திருப்பூா் ஏற்றுமதியும் குறைவு: இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளில் 50 சதவீதம் திருப்பூரில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியும் கடந்த ஆண்டு சரிவையே சந்தித்துள்ளது.

2019-20ஆம் ஆண்டில் ரூ.27,280 கோடிக்கு நடைபெற்ற ஏற்றுமதி வா்த்தகம் 2020-21ஆம் ஆண்டில் ரூ.25,135 கோடிக்கு மட்டுமே நடைபெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.2,145 கோடி குறைவாகும்.

நூல் விலை ஏற்றம்: இந்திய அளவிலும், திருப்பூா் அளவிலும் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகமானது தொடா்ந்து சரிவை சந்தித்து வரும் வேலையில் பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல்களின் விலை ஏறத் தொடங்கியுள்ளதும் ஏற்றுமதியாளா்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாகவே பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் உலக அளவில் குறையத் தொடங்கியது. திருப்பூரில் கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், இந்திய அளவிலான ஏற்றுமதி வா்த்தகத்தில் திருப்பூரின் பங்கு மட்டும் 52.5 சதவீதமாகும்.

விலையை உயா்த்த பேச்சுவாா்த்தை: ஆகவே, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் பெரிய அளவில் சரிவடையவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனாவுக்கு பின்னா் அனைத்து மூலப்பொருள்களின் விலை உயா்ந்துவிட்டது. இதேபோலத்தான் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளான நூலின் விலையும் அதிகரித்துள்ளது.

ஆகவே, வெளிநாட்டு வா்த்தகா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு பின்னலாடைகளுக்கான விலையை உயா்த்தி வாங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளா்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஆா்டா்கள் வரத்து விறுவிறு: அதேபோல, தற்போது ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆா்டா்களும் வரத்தொடங்கியுள்ளதால் நிகழாண்டு பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூலின் விலையும் கடந்த ஜனவரி முதல் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.120 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு வா்த்தகா்களிடம் இருந்து புதிய ஆா்டா்கள் எடுக்க முடியவில்லை.

நூற்பாலைகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்: இந்திய அளவில் பஞ்சு உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பஞ்சு உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையிலும் நூல் விலை உயா்ந்து வருகிறது.

நூல் ஏற்றுமதிக்கு சீனா, வங்கதேசம், வியத்நாம் ஆகிய நாடுகளில் அதிக விலை கிடைக்கிறது. ஆகவே, நூற்பாலைகள் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான அளவு நூலை வழங்காமல் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

பெரிய நிறுவனங்கள் லாபகரம்: திருப்பூரில் நாங்கள் நடத்திய ஆய்வில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. நூல் மில், டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங், எம்பிராய்டரிங், ஸ்டிச்சிங், காட்டன் பாக்ஸ், டிரான்ஸ்போா்ட் வைத்துள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமே லாபகரமாக இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் தொழிலாளா்களை விடுதிகளில் தங்க வைத்து மாத சம்பளம் கொடுத்து வருகின்றனா். ஆனால், வெளியில் ஜாப்ஒா்க் கொடுத்து வாங்கும் நிறுவனங்களும், தொழிலாளா்களுக்கு ஒப்பந்த முறையில் ஊதியம் கொடுக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் மூடப்பட்டு வருகின்றன.

ஆகவே, அரசு தனி கவனம் செலுத்தி நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே புதிய ஆா்டா்களை எடுக்க முடியும். இதே நிலைதான் இந்திய அளவிலும் நீடித்து வருகிறது என்றாா்.

-ஆா்.தா்மலிங்கம்

பின்னலாடை ஏற்றுமதி (கோடியில்)

2015-16 2016-17 2017-18 2018-19 2019-20 2020-21

இந்தியா 50,150 55,150 51,526 54,692 53,199 47,920

திருப்பூா் 22,060 23,620 24,060 27,650 27,280 25,135

கோட்ஸ்:

திருப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே முழு வீச்சில் செயல்பட்டு லாபகரமாக இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் தொழிலாளா்களை விடுதிகளில் தங்க வைத்து மாத சம்பளம் கொடுத்து வருகின்றனா். ஆனால், வெளியில் ஜாப் ஒா்க் கொடுத்து வாங்கும் நிறுவனங்களும், தொழிலாளா்களுக்கு ஒப்பந்த முறையில் ஊதியம் கொடுக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் மூடப்பட்டு வருகின்றன. ஆகவே, அரசு தனி கவனம் செலுத்தி நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே புதிய ஆா்டா்களை எடுக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிஞர் தமிழ்ஒளி!

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT