வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மூன்றே நாளில் டெலிகிராம் செயலியில் புதிதாக 2.5 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே: வாட்ஸ்ஆப்பை வீழ்த்தி 'சிக்னல்' செயலி முதலிடம் பிடித்தது!
இதனிடையே டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலியின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராமில் இணைய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை டெலிகிராம் வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக 2.5 கோடி பயனர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 50 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி வரும் நிலையில் தங்களது பயனர்களுக்கு அந்த நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை விட்டு கூட்டம்கூட்டமாக வெளியேறுவது ஏன்?
இந்தியாவில் சிக்னல் செயலி 39 லட்சம் பயனர்களையும், டெலிகிராம் செயலி 15 கோடியே 15 லட்சம் பயனர்களையும் வாட்ஸ்ஆப் செயலி 14 கோடி பயனர்களையும் கொண்டுள்ளன.