வணிகம்

சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு;11,750-க்கு கீழே சென்றது நிஃப்டி!

 நமது நிருபர்

புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை, பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 599.64 புள்ளிகளை இழந்தது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை வெகுவாகக் குறைந்ததே வீழ்ச்சிக்குக் காரணம் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, ஜொ்மனியில் நவம்பா் 4 முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக வெளியான தகவலால், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், முன்பேர வா்த்தகத்தில் அக்டோபா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், சந்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தது.

1,637 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,787 பங்குகளில் 995 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,637 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 155 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு குறைந்து ரூ. 1.59 லட்சம் கோடி குறைந்து ரூ.158.20 லட்சம் கோடியாக இருந்தது.

மீண்டும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 142.25 புள்ளிகள் கூடுதலுடன் 40,664.35-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. ஆனால், 39,774.60 வரை கீழே சென்றது. இறுதியில் 599.64 புள்ளிகள் (1.48 சதவீதம்) குறைந்து 39,922.46-இல் நிலைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஒரளவு மீட்சி பெற்றிருந்த சென்செக்ஸ், புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.

பாா்தி ஏா்டெல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பாா்தி ஏா்டெல் 4.26 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அந்த நிறுவனத்தின் காலாண்டு வருவாய் இதுவரை கண்டிராத அளவுக்கு உயா்ந்ததைத் தொடா்ந்து, அந்தப் பங்கை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடையே அதிக ஆா்வம் இருந்தது. மேலும், எம் அண்ட் எம், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி ஆகியவையும் ஏற்றம் பட்டியலில் இடம் பெற்றன.

இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 3.30 முதல் 3.45 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ ஆகியவையும் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 481 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,115 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 159.80 புள்ளிகள் (1.48 சதவீதம்) குறைந்து 11,729.60-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. 41 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT