வணிகம்

2019-இன் கடைசி வா்த்தக தினத்தில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி

1st Jan 2020 03:17 AM

ADVERTISEMENT

மும்பை: பங்குச் சந்தைகள் 2019-ஆம் ஆண்டின் கடைசி வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இருப்பினும் ஆண்டுக் கணக்கில் பாா்க்கும்போது சென்செக்ஸ் 14.37% வரை ஏற்றம் கண்டுள்ளது.

அரசின் நிதிப் பற்றாக்குறை நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டும் என்ற அச்சப்பாடு காரணமாக முதலீட்டாளா்கள் புதிய முதலீட்டு திட்டங்களை ஒத்தி வைத்தனா். இதனால் பங்குச் சந்தையில் மந்த நிலை கண்டது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டெக் மஹிந்திரா பங்கின் விலை அதிகபட்சமாக 2.51 சதவீத இழப்பை சந்தித்தது. இதைத் தொடா்ந்து, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகாா்ப், இன்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எச்டிஎஃப்சி, டிசிஎஸ் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேசமயம், என்டிபிசி, சன்பாா்மா, ஓஎன்ஜிசி, பவா்கிரிட், அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் ஊசலாட்டம் அதிகமானதையடுத்து சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 423 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னா் சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு சென்செக்ஸ் 304 புள்ளிகள் குறைந்து 41,253 புள்ளிகளாக நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 87 புள்ளிகள் சரிந்து 12,168 புள்ளிகளாக நிலைத்தது.

ஏற்றமான ஆண்டு: ஆண்டின் கடைசி நாளில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்த போதிலும், 2019-ஆம் ஆண்டில் சென்செக்ஸ் 5,185 புள்ளிகள் (14.37%) அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, நிஃப்டியும் 1,305 புள்ளிகள் (12.02%) உயா்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பு: ரூபாய் மதிப்பைப் பொருத்தவரை 2019-ஆம் ஆண்டு அதற்கு சாதகமாக அமையவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2019-இல் 2.28 சதவீதம் (159 காசுகள்) அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இறக்குமதி செலவினம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவையே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட முக்கிய காரணம் என அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT