தொழில் மலர் - 2019

வரவேற்பைப் பெறும் பழைய கார்கள் விற்பனை மையங்கள்

16th Oct 2019 03:20 PM

ADVERTISEMENT

தருமபுரியில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பழைய கார்கள் விற்பனை நிலையங்கள் கடந்த சில ஆண்டுகளாகத் துவங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 நடுத்தரக் குடும்பத்தினரும், ஓரளவு ஊதியம் பெறுவோரும் இருசக்கர வாகனப் பயன்பாட்டை கடந்து தற்போது கார் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.
 இதில், பெரும்பாலானோர் தங்களுடைய நிதிநிலை கருதி, புதியதாக கார்களை வாங்குவதைக் காட்டிலும், பழைய (யூஸ்டு) கார்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். இவற்றிற்கு பிரதான காரணம், புதிய கார்கள் விலையை விட குறைவான விலையில், பழைய கார்கள் கிடைக்கும் என்கிற எண்ணமேயாகும். மேலும், தாங்கள் நினைக்கும் விலையில் கிடைப்பதாலும், பழைய கார்களுக்கும் கடனுதவி கிடைப்பதாலும், இயல்பாகவே அவற்றின் பக்கம் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் செல்கின்றனர். முன்னெல்லாம் பெருநகரங்களில் மட்டும் பழைய கார்கள் விற்பனை நிலையங்கள் இருக்கும்.
 சிறுநகரங்களில் இருப்போர், அங்கு சென்று, பெரும்பாலும் இடைத்தரகர்கள் உதவியை நாடி அவர்களுக்கு ஒரு தொகை செலவழித்து, தங்களுக்குப் பிடித்தமான நிறுவன கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். பழைய கார்கள் விற்பனை வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், தற்போது முன்னணி நிறுவனங்களும் யூஸ்டு கார்ஸ் என்கிற பெயரில் பழைய கார்களை விற்பனை செய்து வருகின்றன. மேலும், செல்லிடப் பேசிகளில் புதிய செயலிகளை உருவாக்கி அதன் வழியாகவும் (இணையம்) தற்போது இத்தகைய விற்பனை செய்யப்படுகிறது.
 தருமபுரி நகரைப் பொருத்தவரை பழைய கார்கள் தேவைப்படுவோர் முன்பெல்லாம், சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இடைத்தரகர்கள் வழியாகச் சென்று பழைய கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இவற்றிற்கு கிடைத்துள்ள வரவேற்பை கண்ட சில வியாபாரிகள், தருமபுரி நகரில் பழைய கார்கள் விற்பனை நிலையத்தை துவங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
 
 துவக்கத்தில் இத்தகைய நிறுவனங்கள் ஒன்றிரண்டு மட்டும் இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் பழைய கார்கள் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தருமபுரி நகரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், அதிக எண்ணிக்கையில் பழைய கார் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
 அதேபோல தருமபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் பழைய கார்கள் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு வியாபாரிகள் வெளியூர்களிலிருந்தும், உள்ளூர் வாடிக்கையாளர்களிடமிருந்தும் கார்கள் வாங்கி வைத்து விற்பனை செய்கின்றனர்.
 அதோடு, தங்களது கார்களை விற்க வேண்டும் என நினைப்போரும், தங்களது வாகனங்களை அந்த நிலையங்களில் விட்டுச் செல்கின்றனர். அவை விற்கப்படும்போது, விற்பனை நிலையத்துக்கு சேவை கட்டணம் அளிக்கின்றனர். இதனால், வாடிக்கையாளர், விற்பனையாளர், நிலைய உரிமையாளர் என மூவரும் பயன்பெறுகின்றனர். இந்த நிலையங்களில் வாடிக்கையாளர் விரும்புகின்ற அனைத்து முன்னணி நிறுவனத்தின் கார்களும், அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இவற்றை பார்வையிட்டு தங்களது பிடித்தமானவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் வகையில் நீண்ட வரிசையில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பழைய கார்கள் விற்பனை நிலையங்கள், விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் உதவியாகவும், பயனாகவும் உள்ளன.
 
 ஆர். ராதாகிருஷ்ணன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT