தொழில் மலர் - 2019

சேலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.. மூலிகை நாப்கின் தயாரிக்கும் பட்டதாரி

16th Oct 2019 03:18 PM

ADVERTISEMENT

பெண்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் உடல் ரீதியான பிரச்னைக்குரிய மாதவிலக்கு நாள்கள் மிகவும் வலியும் வேதனையும் மிக்கதாகும். பிளாஸ்டிக், மீள் சுழற்சி காகிதங்கள் மற்றும் வேதியியல் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களால் உடல் ரீதியாக கர்ப்பப் பை பாதிப்பு, அரிப்பு, ஒவ்வாமை, கருமுட்டை உற்பத்தி திறன் பாதிப்பு, நோய் தடுப்பாற்றல் குறைதல், வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாப்கின் தயாரிக்கும் பெரும் நிறுவனங்கள் பல வேதியியல் பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் நாப்கின்களையே தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாக சந்தைப்படுத்தி வருகின்றன.

 பெரும் நிறுவனங்களின் நாப்கின்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க இயற்கை முறையிலான மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களை பெண்கள் உபயோகிக்க துவங்கி உள்ளனர். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வணிக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்த திவ்யபாரதி கடந்த சில ஆண்டுகளாக மூலிகை நாப்கின்களை தயாரித்தும் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே தயாரிப்பதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். அதன் மூலமாக வருமானமும் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

நீங்கள் செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் நிச்சயம் இதைப் படித்தே ஆக வேண்டும்.. ஊத்தங்கரை மரச்செக்கு எண்ணெய்

 துளசி, வேப்பிலை, கற்றாழை போன்றவற்றுடன் பல்வேறு மூலிகைகளைச் சேர்த்து தரமான பருத்தி துணிகள் கொண்டு மூலிகை நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ரூ. 50 ஆயிரத்துக்குள்பட்ட தொகையில் சிறுசிறு உபகரணங்கள், தையல் இயந்திரம் போன்றவற்றை முதலீடாக கொண்டு வேலை ஆள்கள் இல்லாமல் நாள் ஒன்றுக்கு 100 நாப்கின்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வேதியியல் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு உடலுக்கு பாதிப்பு இல்லாத மூலிகை நாப்கின்களை தயாரித்து தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.

 உடலுக்குப் பாதிப்பு இல்லாததால் பலரும் இவரது மூலிகை நாப்கின்களை தேடி வந்து வாங்க துவங்கினர். வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், மூன்று வகையிலான நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்ய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தினார்.

 நாப்கின்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள்கள் சேலத்திலேயே கிடைப்பதால் கொள்முதல் செய்வதற்கான போக்குவரத்துச் செலவும் குறைகிறது. முகநூல், வாட்ஸ் அப், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவே சந்தைப்படுத்தப்படுவதால் விளம்பரச் செலவும் இல்லை.

 வீட்டிலேயே சிறு அறையே நாப்கின்களை தயாரிக்க போதுமானதாக இருப்பதால் வாடகைக் கட்டடமும் தேவைப்படுவதில்லை, உபயோகிக்கத் தொடங்கிய பெண்கள் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதால் தொடர்ந்து வாங்கிக் கொள்கின்றனர் எனத் தெரிவித்தார்.

 என். கவிக்குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT