தொழில் மலர் - 2019

மீண்டெழுகிறது "கோலி சோடா'

16th Oct 2019 01:07 PM

ADVERTISEMENT

வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகையால் நலிவடைந்திருந்த உள்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் கோலிசோடா தயாரிப்புத் தொழில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மீண்டெழுந்து வருவதாக கோலிசோடா தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
 கடினத் தன்மையான கண்ணாடிப் பாட்டில்களில் சுத்தமான நீரைப் பயன்படுத்தி, அதில் வாயுவைக் கலந்து (கேஸ்) தயாரிக்கப்படும் கோலி சோடாக்களை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் ரசாயனக் கலப்பில்லாத குளிர்பானங்களையும் பன்னீர் சோடாவின் சுவையையும் அவர்கள் ருசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் 1970 களின் துவக்கத்தில் தமிழகத்தில் அறிமுகமான வெளிநாட்டுக் குளிர்பானங்கள் கோலிசோடாக்களை காலியாக்கிவிட்டதே இதற்கு காரணமாகும். வெளிநாட்டுக் குளிர்பானங்களால் காலியானது கோலிசோடாக்கள் மட்டுமல்ல. கோலிசோடா தயாரிப்பைத் தொழிலாகக் கொண்டிருந்த பல லட்சம் தொழிலாளர்களும் தான். வெளிநாட்டுப் பானங்கள் தமிழகத்தில் அறிமுகமாகி 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மக்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்நிலையில் 2017-இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு, உள்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் கோலிசோடா தயாரிப்புத் தொழில் மீண்டெழுந்து வருகிறது என கோலிசோடா தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும் கோலிசோடாவிற்குமான சம்பந்தம் குறித்து, 112 ஆண்டு கால பாரம்பரியமாக கோலிசோடா தயாரிப்புத் தொழிலில் உள்ள மதுரை மாப்பிள்ளை விநாயகர் கதிர்வேல் கூறியது:
 இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் தான் கோலிசோடா அறிமுகம் ஆனது. எனது முன்னோர்கள் 1907-இல் ஜெர்மனியில் இருந்து கோலிசோடா பாட்டில்களை இறக்குமதி செய்தனர். ஜெர்மானியர்களிடம் கோலிசோடா தயாரிப்பைக் கற்றுக்கொண்டு மதுரையில் தொழிலைத் துவக்கினர். அப்போது விநாயகர் எம்பளத்துடன் ஜெர்மனியில் இருந்து சோடாப் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து கோலிசோடா மக்களிடம் பிரபலம் ஆனவுடன், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் இறக்குமதியாகும் பாட்டில்களை எங்களிடம் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கி தொழில் செய்யத் துவங்கினர். கிட்டத்தட்ட மதுரை நகரில் மட்டும் மொத்தம் 110 கோலிசோடா தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வந்தன. 50 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து கேரளம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மதுரைக்கு வந்து கோலிசோடாவை வாங்கி சென்றனர். கிராமங்கள் தோறும் பலரும் சோலிசோடா தயாரிப்பைக் குடிசைத் தொழிலாகச் செய்யத்துவங்கினர். இவ்வாறு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற கோலிசோடா தயாரிப்பு நிறுவனங்கள் செழித்து வளர்ந்தன. மேலும் ரசாயனக் கலப்பில்லாத குளிர்பானங்கள், ஜிஞ்சர், பன்னீர் போன்ற தயாரிப்புகளின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். இந்நிலையில் 1970 களின் துவக்கத்தில் வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் இளைஞர்களை குறி வைத்து வியாபாரத்தில் குதித்தன. குறிப்பாகக் கல்லூரிகளின் முன் முகாமிட்டு பத்து பைசாவிற்கு குளிர்பானங்களை அறிமுகப்படுத்தின. இதையடுத்து மெல்ல மெல்ல உள்நாட்டு குளிர்பானங்கள், கோலிசோடா தயாரிப்புத் தொழில் மந்தமடையத் துவங்கியது. 1975 முதல் 1985 வரை மாதத்திற்கு தலா ஒரு நிறுவனத்தில் இருந்து 3 லட்சம் கோலிசோடா மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டன. இதையடுத்து படிப்படியாக கோலி சோடா தயாரிப்பு குறைந்தது. மதுரையில் தொழில் நடத்தி வந்த பலரும் சோடா நிறுவனத்தை மூடிச்சென்றனர். இதனால் 2005 காலக்கட்டத்தில் மதுரையில் மாதத்திற்கு 5 ஆயிரம் கோலிசோடாவை விற்பதற்கே வழியில்லாமல் போனது. மதுரை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் செழித்திருந்த இத்தொழில் நலிவடைந்தது. இந்நிலையில் 2017-இல் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறி அந்த பானங்களை சாலையில் ஊற்றிப் போராடினர். இதனால் பல கடைகளில் வெளிநாட்டுப் பானங்கள் விற்கப்படுவது இல்லை என எழுதி பலகை வைத்தனர். உள்நாட்டு கோலிசோடா, குளிர்பானங்களுக்கு ஆதரவு கூடியது. அதன்பிறகு தற்போது மதுரையில் லட்சக்கணக்கில் கோலிசோடா மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதேபோன்ற ஆதரவும் மக்களிடையே விழிப்புணர்வும் நீடித்தால், இத்தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் மீண்டும் இந்த தொழிலுக்கு வருவார்கள் என்றார்.


 -மு.கார்த்திக்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT