தொழில் மலர் - 2019

மஞ்சள் மகிமை நாமகிரிப்பேட்டை

16th Oct 2019 02:52 PM

ADVERTISEMENT

குடும்பத்தில் நடைபெறும் எந்தவொரு மங்கள காரியத்திலும் முக்கியமாக இடம் பெறுவது மஞ்சள் என்று சொன்னால் அது மிகையாது.
 அந்த வகையில், தமிழ் கலாசாரத்தோடும், தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் இரண்டற கலந்து விட்டது மஞ்சள்.
 உழவுக்கும், உழவுத் தொழிலுக்கும் பெருமை சேர்க்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சள் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கிறது. இதுபோன்ற முக்கியத்துவம் பெற்ற விவசாயிகளின் முக்கிய பணப் பயிரான மஞ்சள், தை மாதங்களில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். ராசிபுரம் பகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதியில் மட்டும் விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் பயிரிடப்படுகிறது.
 தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஊனந்தாங்கல் போன்ற பகுதியில் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் சராசரியாக 750 ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. வழக்கமாக மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மஞ்சளை நடவு செய்யும் விவசாயிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்வர்.
 இந்தப் பகுதியில் விளையும் மஞ்சள் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள மஞ்சள் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு மஞ்சளாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 நாமகிரிப்பேட்டை பகுதியில் நிகழ் ஆண்டு பருவமழை அதிக அளவில் பொழிந்துள்ள காரணத்தால் வழக்கத்தை விட மஞ்சள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிப்படியாக மஞ்சளின் விலை அதிகரித்து வருவது இதைப் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 நிகழ் ஆண்டில் விரலி ரகம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 8,000 என்ற அளவிலும், உருண்டை ரகம் குவிண்டால் ரூ.7,000 என்ற அளவிலும், பனங்காளி ரகம் ரூ. 13 ஆயிரம் என்ற அளவிலும் விலை போகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT