தொழில் மலர் - 2019

நாற்றுப் பண்ணை தொழில் சாதிக்கும் ஏற்காடு இளைஞர்

16th Oct 2019 03:51 PM

ADVERTISEMENT

ஏற்காடு மலைக் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற இளைஞர் நாற்றுப்பண்ணை (நர்சரி) மூலம் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு வணிக உத்திகளை கற்றுக் கொடுத்து தொழில்முனைவோர் ஆக்கி சாதித்து வருகிறார்.
 நாற்றுப் பண்ணைத் தொழிலில் சாதித்து வருவதோடு, வாடிக்கையாளர்களைத் தொழில்முனைவோராக்கி வரும் உத்தி குறித்து சுந்தர்ராஜ் கூறியது:
 சேர்வராயன் மலையில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காடு கடுக்காமரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (34). பி.பி.ஏ. பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் கை நிறைய ஊதியம் பெற்றவர்.
 ரம்மியமான தட்பவெப்ப நிலை, பார்க்கும் இடமெல்லாமல் காஃபி தோட்டம், காட்சிமுனையும் என ஏற்காடு மலையில் கிடைக்கும் அமைதியான வாழ்க்கையை விடுத்து, அடுத்து எதிர்காலம் என யோசிக்க தோன்றிய தருணத்தில்தான் நர்சரியைத் தொடங்கிடலாம் என முடிவெடுத்தேன்.
 2006 முதல் 2011 வரை சென்னையில் தங்கி பணியாற்றிய நேரத்தில், மீண்டும் ஏற்காடுக்குச் சென்று விடுவதென முடிவு செய்யப்பட்டு 2013-இல் ஏற்காடு வந்தேன்.
 மூன்று வயது முதலே செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் இருந்தது. நான் வளர்த்த செடி என்னை விட உயரமாக வளர்ந்தது. செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் தந்தை பொன்னுசாமியிடம் இருந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.
 சுமார் 2,200 வகையான செடிகளை நர்சரியில் பராமரித்து வருகிறேன்.விவசாயத்தில் எல்லோரும் பணம் வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், பணம் வரும் வழி என்ன என்பது பற்றி யோசிக்கவில்லை. இதற்காக நேச்சர் லவ் ஆர்கனைசேஷன் தொடங்கி அதன் மூலம் விவசாயிக்கு என்ன தேவை, எதற்காக தேடல், என்ன கிடைத்து கொண்டிருக்கிறது என்ற வகையில் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு நாள்தோறும், வாரம்தோறும், மாதம்தோறும், ஆண்டுதோறும் வருவாய் கிடைக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
 நான் பராமரித்து வரும் சுமார் 2,200 வகை செடிகள் குறித்து சந்தைப்படுத்தி வருகிறேன். நர்சரி மூலமாக அறிமுகமானவர்கள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தொழில்முனைவோராக மாற்றிட தொழில் மற்றும் வணிக ரீதியில் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
 நர்சரி வைக்க மூலப்பொருள்களைத் தேடுவது எப்படி?, எது தேவை?, எது விருப்பம்? என பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
 அழகு செடிகள், காற்றை சுத்தப்படுத்தும் செடிகள், காற்றை உற்பத்தி செய்யும் செடிகள், நச்சுப்பொருள் காற்றை சுத்திகரித்து, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் செடிகள், மருத்துவ செடிகள், பாரம்பரிய செடிகள், இந்தியாவில் வளரக் கூடிய செடிகள், வெளிநாட்டு வகை செடிகள், மரபணு மாற்றப்பட்ட செடிகளைப் பராமரித்து வருகிறேன்.
 சென்னை, சேலம், ஈரோடு, ஏற்காடு மற்றும் தில்லி, மும்பை ஆகிய இடங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். என்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்து கொள்ளும் வகையில் தேவையான செடி வகைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறேன்.
 ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் மட்டும் வளரும் செடிகள், வீட்டுக்குள் வைத்து பராமரிக்கப்படும் செடிகள் என 2,200 வகை செடிகள் உள்ளன.
 மேலும் ஏற்காடு மலையில் சுமார் 2,000 வகை மருத்துவக் குணம் மிகுந்த மூலிகைச் செடிகள் உள்ளன. வருங்கால சந்ததியினருக்கும் அந்த மூலிகைச் செடிகள் கிடைக்க வேண்டும்.
 சித்தம் செடி வளர்ப்பு பயிற்சி மூலம் தொழில் வேறு, வணிகம் வேறு என்ற வேறுபாட்டை உணர்த்தி அவர்களை தொழில்முனைவோராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
 நர்சரி தொழிலில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து எனது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஆலோசனைகளைத் தெரிவிக்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் செடிகளை தருவதில் இலக்காக உள்ளேன். அந்தவகையில் ரூ.5 முதல் ரூ.150 வரையிலும், செராமிக் தொட்டி உள்ளிட்டவற்றுக்கு ரூ. 1,000 முதல் ரூ.1,500 வரை விலை போகும்.
 சித்தம் செடி வளர்ப்பு பயிற்சி மூலம் அடிப்படை வகுப்பு 6 மணி நேரமும், அடித்தள வகுப்பு 8 மணி நேரமும், மேம்பட்ட பயிற்சி 4 என மொத்தம் 18 மணி நேர பயிற்சி அளிக்கிறேன். ஒவ்வொரு பயிற்சிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கவனத்துடன் செயல்பட்டு, செடி வளர்ப்பைக் கற்றுத் தந்து வருகிறேன். இதுதவிர யோகா பயிற்சியும், பெரு நிறுவனங்களில் வணிக மேலாண்மை பயிற்சியும் வழங்கி வருகிறேன் என்றார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT