தொழில் மலர் - 2019

சிறுதானிய உருண்டைகள்: கைநிறைய சம்பாதிக்கலாம்

16th Oct 2019 03:52 PM

ADVERTISEMENT

நம்முடைய உடல் நலத்தையும், உடல் இயக்கத்தையும் நாம் உண்ணும் உணவுகளே தீர்மானிக்கின்றன.

 தற்போது கடைகளிலும், உணவகங்களிலும் விற்கப்படும் துரித உணவு வகைகளும், பைகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களும் நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.

 கிடைக்கும் நேரத்தில் வறுத்த, பொறித்த தரமற்ற உணவுப்பொருள்களை அடிக்கடி உண்ணும் பழக்கத்தால் உடல் நலம் கெடுகிறது. தற்போது பெரும்பாலான மக்களிடம் உடல் நலத்துக்கு தீங்கிழைக்காத சிறுதானிய உணவுகள், வீட்டுமுறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, இயற்கை முறையிலான எள் உருண்டை, கடலை உருண்டை போன்ற உணவுப்பொருள் மற்றும் திண்பண்டங்களை உட்கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

லாபம் தரும் ஊறுகாய் விற்பனை

 அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் பாரம்பரிய கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான திண்பண்டங்களை வீட்டிலேயே சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பத்து பேரை வேலைக்கு அமர்த்தி திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்கிறார். இளங்கலை பட்டதாரியான இவர், இந்தத் தொழில் பற்றி மேலும் கூறியதாவது:

 பொதுவாக கடைகளில் விற்கப்படும் நிறைய நொறுக்கு தீனி வகைகளும், பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களும் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு பாரம்பரிய திண்பண்டங்களைத் தயாரித்து வருகிறோம். வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து இந்த திண்பண்டங்களைத் தயாரித்தேன். கடலை மிட்டாய், கடலை பர்பி, கடலை உருண்டை, எள் உருண்டை, கம்பு உருண்டை, பாசிப்பயறு உருண்டை, நரிபயறு உருண்டை, கொள்ளு வடகம், கொள்ளு தட்டுவடை, கடலைமாவு நொறுக்குகள், சிறுதானிய உருண்டைகள், ராகி உருண்டை, நவதானிய உருண்டை ,சாமை உருண்டை, ராகி முறுக்கு, சாமை வடகம், தினை முறுக்கு, போன்ற தின்பண்டங்களை கைக்குத்தல் முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.

 மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் எனது திண்பண்டங்களை அளித்து அந்த அறிமுகத்தால் நிறைய திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர்கள் வரத் துவங்கின. இதைத் தயாரிக்க வீட்டில் சிறிய அளவிலான இடமும், கைப்பக்குவமும், சிறிய அளவிலான முதலீடுமே போதுமானது. தனி ஆளாகத் துவங்கி தற்போது 10 வேலையாள்கள் எனது வீட்டிலேயே திண்பண்டங்கள் தயாரிக்க பணியமர்த்தப்பட்டு வாரம் 5 நாள்கள் வேலை செய்து வருகின்றனர்.நாளொன்றுக்கு 2 ஆயிரம் எண்ணிக்கையிலான இந்த திண்பண்டங்களைச் செய்து சேலம், வாழப்பாடி, நாமக்கல், ஈரோடு, ராசிபுரம், திருச்செங்கோடு போன்ற நகரப் பகுதி சிறுசிறு பெட்டிக் கடை, மளிகைக் கடைகளுக்கு இவற்றை விற்பனை செய்து வருகிறேன். மாதம் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன் எனத் தெரிவித்தார்.
 என்.கவிக்குமார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT