தொழில் மலர் - 2019

கே. ஈச்சம்பாடியில் 52 ஏக்கரில் உணவுப் பூங்கா  

16th Oct 2019 04:18 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி ஊராட்சியில் 52 ஏக்கரில் சிட்கோ ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தருமபுரி மாவட்டத்தில் பெரிய அளவிலான நீர் ஆதாரங்கள் ஏதுமில்லை. அதேபோல், விவசாயத்தைத் தவிர தொழிற்சாலைகள் அதிக அளவில் இல்லை.
 இதனால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை தேடி பெங்களூரு, கோவை, திருப்பூர், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. இதேபோல், மலைக் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டும் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது.
 இந்த நிலையில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக கம்பைநல்லூர் பகுதியில் சிட்கோ தொழிற்சாலை தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
 தற்போது, மொரப்பூர்-கம்பைநல்லூர் நெடுஞ்சாலையில், கே. ஈச்சம்பாடி ஊராட்சியில், 52 ஏக்கர் நிலப்பரப்பில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன நிதியுதவியுடன், சிட்கோ ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
 அதாவது, முதல் கட்டமாக ரூ. 20 கோடியில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 தருமபுரி மாவட்டத்தில் தக்காளி, மாங்காய், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவை அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
 இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி, உணவுப் பூங்காவில் 120 சிறு, குறு உணவு தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளன.
 இந்த உணவுப் பூங்கா அமைவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் சிட்கோ ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதேபோல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதியிலும் புதிய தொழில்களை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT