தொழில் மலர் - 2019

கெலமங்கலம் அருகே ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு

16th Oct 2019 04:53 PM

ADVERTISEMENT

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் தமிழகத்தில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ராணுவ அமைச்சராக இருந்து தற்போது மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் ராணுவ தளவாட உபகரணங்களை தமிழகத்தில் ஒசூர், சேலம், கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உற்பத்தி செய்ய ஏற்ற இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அவரது அறிவிப்புக்கு முக்கிய காரணம் ஏற்கெனவே இந்த நகரங்களில் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும், இந்தப் பகுதியில் சிறு, குறுந்தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால் அதை ஊக்குவிக்கும் வகையில், இந்த ராணுவத் தளவாட சாலை எனப் பெயரிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒசூரில் ஏற்கெனவே வாகன உற்பத்தித் தொழிற்சாலை சிறப்பாக இயங்கி வருவதாலும், ராணுவத்துக்குத் தேவையான கனரக வாகனங்கள், விமான உதிரி பாகங்கள் மற்றும் ராணுவ உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருவதால் ஒசூர் அருகே கெலமங்கலத்தில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களைத் தயாரிக்க எளிதில் முடியும்.ஒசூரில் முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட் முழுவதும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் கெலமங்கலம் அருகே ஏற்கெனவே தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், ஜி.எம்.ஆர். நிறுவனமும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தியுள்ளன. 
இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் புதிய திட்டமான இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் கெலமங்கலம் அருகே அமையவுள்ளன. விரைவில் இந்தத் தொழில்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் தொடங்கும். இதற்குத் தேவையான சாலை வசதி, மின்வசதி, தொலைத்தொடர்பு வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் நடைபெற்று வருகின்றன.

த. ஞானப்பிரகாசம்

ADVERTISEMENT
ADVERTISEMENT