தொழில் மலர் - 2019

கல்லிலே கலை வண்ணம்: கூலிப்பட்டி சி(க)லைக் கூடங்கள்!

16th Oct 2019 03:06 PM

ADVERTISEMENT

சிற்பங்கள் பேசும்
 இறைவன் படைத்த உலகை மனிதன் ஆளுகிறான்; மனிதன் வடித்த சிலைகளில் இறைவன் வாழுகிறான், கல்லாய் வந்தவர் கடவுளப்பா, கல்லிலே கலை வண்ணம் கண்டார் போன்ற கவிஞரின் பாடல் வரிகளை அக் கால தலைமுறையானாலும், இக்கால தலைமுறையானாலும் மறக்க முடியாது. உயர்ந்த பாறைகள் உடைபடும்போது அவற்றில் சில கற்சிலையாகவும், பல படிக் கற்களாகவும்மாறுகின்றன.
 தான் எந்தக் கல்லில் குடியிருக்க வேண்டும் என்பதை இறைவனே நிர்ணயிக்கிறான் என்பது சிற்பக் கலைஞர்களின் கருத்து. மலையாக நிமிர்ந்த பாறைகள் உடைபட்டு, கற்களாக எடுத்து வரப்படுகிறது.
 அவற்றில் கடவுள்களின் உருவம் வரைந்து, அதை லாவகமாக வெட்டி எடுத்து ஒவ்வொரு நாளும் அதைச் சிலையாக வடிப்பதற்குள், அந்தக் கலைஞர்களின் உதிரம் கீழே சிந்தாமல் இருக்காது என்றே கூறலாம். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுவாமி சிலைகள் வடித்தாலும், கோயிலின் கர்ப்ப கிரகத்தில் வைக்கும் கடவுள் சிலைகளை வடிவமைப்பதில், நாமக்கல் அருகே கூலிப்பட்டி சிற்பக் கலைஞர்களுக்கு யாரும் ஈடு கிடையாது. பல மாநிலங்களைக் கடந்து, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தமிழரின் பெருமையைச் சொல்லும் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தது, நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பக் கலைஞரே.
 
 ஆந்திராவானாலும், கர்நாடகாவானாலும், அங்குள்ள மக்கள் வணங்கி வழிபடும் தெய்வங்கள் நாமக்கல் கூலிப்பட்டி கலைஞர்களின் கைவண்ணமாகதான் இருக்கும். கல்லாலேயே நாதசுரம் செய்து, அதைக் கொண்டு ராக மாலிகா பாடிய சின்னக்கண்ணு என்பவர், இன்னும் பல சாதனைகளை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 இவ்வாறு திறமைமிக்க கலைஞர்களைக் கொண்ட கூலிப்பட்டியானது, நாமக்கல்-துறையூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு மட்டும் 20-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன.
 சிவன், ஆஞ்சநேயர், முருகன், விநாயகர், பெருமாள், அய்யனார், கருப்பனார், மாரியம்மன் மற்றும் யானை, குதிரை, தேர், கோபுரம் என பல்வேறு சிலைகள் கைதேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன.
 சிலைகள் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பதற்காக, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் கூலிப்பட்டிக்கு பலர் வந்து செல்கின்றனர். இங்கு, தை முதல் பங்குனி வரையில் முருகன் சிலைகளும், சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சிவன், விநாயகர் சிலைகளும், ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் அம்மன், பெருமாள் சிலைகளும், ஐப்பசி, மார்கழி மாதங்களில் அனைத்து விதமான கடவுள் சிலைகளும் செய்வதற்கான ஆர்டர்கள் குவியும். அதுமட்டுமின்றி சுதந்திரத்துக்குப் பாடுபட்ட, அரசியலிலிருந்து மறைந்த தலைவர்களின் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன.
 நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் திருப்பதி கூறியது: தமிழகத்தில் அதிக சிலைகள் தயாரிக்கும் இடமாக நாமக்கல் கூலிப்பட்டி உள்ளது. குறிப்பாக சுவாமி சிலைகள் இங்கு அதிகம் செய்யப்படுகின்றன. பெரிய மற்றும் சிறிய அளவில் 15 முதல் 20 வரையிலான சிற்பக் கூடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் பாறைகளை வெட்டி எடுத்து வந்து, அதற்கென உள்ள இயந்திரத்தில் கொடுத்து சிலைக்கு தகுந்தாற்போல் வெட்டி எடுப்போம்.
 பின்னர், அந்தச் சிலையில் சுவாமி படங்களை வரைந்து சிறிது, சிறிதாக வெட்டி எடுப்போம். 3 அடி, 4 அடி உயரம் கொண்ட சிலைகள் ஒரு மாதத்தில் முடிந்து விடும்.
 6 அடி, 8 அடி என்றால், 6 மாதமாகி விடும். அண்மையில், கண்ணப்ப நாயனார் சிலை வடித்து கொடுத்தோம். சிலையின் உயரம், வேலைப்பாடுகளை பொருத்தே விலையை நிர்ணயிப்போம். ஒரு சிலை செய்து கொடுத்தால், அவற்றின் அளவைப் பொருத்து சுமார் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கிடைக்கும்.
 சாலையோரம் அமர்ந்துதான் சிலைகளை செய்து வருகிறோம். சிற்பக்கூடத்துக்கென அரசு தனி இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். நாங்கள் வடிக்கும் சிலைகளுக்காக, உடலில் காயம்படாத நாள்களே கிடையாது.
 இருந்தபோதிலும், கோயில்களில் சுவாமியை வணங்கும்போது மக்கள் அடையும் பரவசமே, எங்களது உழைப்புக்கான வெற்றி. கல்லில் கலைவண்ணம் காண்பது எங்களுடைய திறமைக்கும், உழைப்புக்குமான சான்று என்றார்.
 -எம்.மாரியப்பன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT