தொழில் மலர் - 2019

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு: விடுதிகளில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு, வர்த்தகக் கடைகள் அதிகரிப்பு

16th Oct 2019 02:48 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சுற்றுலாப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் உள்ளது. இது, சேலத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பிரதேசமாகும்.
 ஆண்டு முழுவதும் 17 டிகிரி செல்சியஸ் முதல் 21 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் கொண்ட எழில் மிகுந்த ஏற்காடு மலைப் பகுதி.
 ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் காஃபி, மிளகு ,கமலா ஆரஞ்ச்,ஏலக்காய், பயிர்கள் விளைகின்றன.
 மேலும் பழங்களில் பலாப்பழங்கள், அத்தி, அவக்கோடா, மலைவாழை, பேரிக்காய், கொய்யா விளைகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் தமிழ்நாடு ஹோட்டல் தங்கும் விடுதி மற்றும் என்.ஜி.ஜி.ஓ. விடுதி, மேலும் 10-க்கும் குறைவான தனியார் தங்கும் விடுதிகள் இருந்த நிலையில் 1990-க்கு பின் ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளான லேடிஸ் சீட், படகு இல்லம், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை வியூ பாயின்ட் ஆகிய பகுதிகள் மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் வழிகளில் ஏராளமான விடுதிகள் வந்துள்ளன.
 
 இதுகுறித்து தனியார் விடுதி மேலாளர் பிரின்ஸ் கூறியதாவது:
 ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 25 அறைகள் முதல் 60 அறைகள், 100 அறைகள், குடில்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
 ஏற்காடு சுற்றுலா விடுதிகளில் ஓர் அறைக்கு ரூ. 800 முதல் ரூ. 15 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு வாடகையாக வசூலிக்கப்படுகின்றது. ஏற்காடு சுற்றுலாப் பகுதி விடுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் மாத ஊதியம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை பெறுகின்றனர். ஏற்காடு மலைக் கிராம மலைவாழ் மக்கள் ஆண்கள், பெண்கள் சுற்றுலாப் பகுதி விடுதிகளில் பணியாற்றுகின்றனர் என்றார் அவர்.
 இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் விடுதியினர் காலை உணவு அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். இவ் விடுதிகள் ஒவ்வோர் ஆண்டும் கோடை காலங்கள் கோடை அல்லாத காலங்கள் என விடுதியின் கட்டணமாக சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படுகின்றன.
 எழில்மிகு ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு ஆண்டு முழுவதும் வார விடுமுறை நாள்களான ஒவ்வொரு வெள்ளி இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் விழாக் காலங்கள், பள்ளிகள் காலாண்டுத் தேர்வு , அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்கள், அரசு விடுமுறை நாள்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நாள்களில் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு தமிழகத்திலிருந்தும், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம் மற்றும் வடமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி மகிழ்கின்றனர்.
 
 -எம். ஜான்போஸ்கோ

ADVERTISEMENT
ADVERTISEMENT