தொழில் மலர் - 2019

ஏற்றுமதியில்... ஏற்காடு காஃபி

16th Oct 2019 02:40 PM

ADVERTISEMENT

சேலம் நகருக்கு மிக அருகே ஒரு மணி நேரப் பயணத்தில் 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து எட்டி பிடித்து விடும் தூரத்தில் ஏழைகளின் ஊட்டி என அறியப்படும் ஏற்காடு சுற்றுலா தலம் உள்ளது.
 வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் காண்போரை கவர்ந்திழுக்கும் காஃபி தோட்டங்களில் இருந்து எடுத்து விற்பனை செய்யப்படும் தரமான திடமான காபி கொட்டைகள் அமெரிக்கா, ஜப்பான் என பல உலக நாடுகளில் காபி சுவையர்களால் ருசிக்கப்படுகிறது.
 தமிழகத்தில் பெரும்பாலும் டீ மட்டுமே குடித்து பழகிவிட்டதால், வீட்டில் காஃபி அருந்தும் பழக்கம் குறைவாகவே உள்ளது. அப்படிதான் வேடிக்கையாக காஃபியை ருசித்து குடித்துவிட்டு, ஏன் சிறந்த காஃபியை தயாரித்து நாமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாமே என யோசித்ததன் விளைவு தான் இன்று கடல் கடந்து காஃபி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் சேலத்தைச் சேர்ந்த எம். திவ்யபாரதியும், அவரது சகோதரர் எம்.யுவராஜும்.
 
 சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த எம்.திவ்யபாரதி, பிளஸ் 2 படிக்கும் போதே விமான பைலட் ஆகும் முனைப்பில் மும்பை சென்று 6 மாதம் பயிற்சி பெற்றார். பின்னர் சேலம் வந்த அவர் தொலைதூர கல்வியில் பி.ஏ. பொது நிர்வாகம் படித்துக் கொண்டே தந்தையின் சுற்றுலா தொழிலை கவனித்து வந்தார்.எம்.ஏ. பொது நிர்வாகம் படித்துவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தபோது வேடிக்கையாக ஒரு கடைக்கு காஃபி குடிக்க சென்ற போது, நாமும் ஏன் காஃபி தொழிலில் ஈடுபட கூடாது என்று யோசித்த விளைவுதான் இன்று காஃபி தொழிலில் சகோதரருடன் இணைந்து தடம் பதித்து சாதித்து வருகிறார் திவ்யபாரதி.
 இவரது சகோதரர் யுவராஜின் மனைவி ப்ரியதர்ஷினியுடன் உறுதுணையோடு காஃபி தொழிலைக் கவனித்து வருகிறார். இவரது கணவர் நிஜித், இந்திய ராணுவத்தில் கார்கில் முனையில் பணியாற்றி வருகிறார். காஃபி தொழிலில் தனது ஈடுபாடு குறித்தும், கடல் கடந்து வியாபாரம் செய்வது குறித்து எம். திவ்யபாரதி கூறியது:
 சேலம் நகருக்கு மிக அருகில் ஏற்காடு உள்ளது. இங்கு விளையும் காஃபி, இப் பகுதியைச் சேர்ந்த பலரால் ருசிக்கப்படுவதில்லை. மாறாக, உலக நாடுகளில் காஃபி சுவையர்களால் ருசிக்கப்படுகிறது. ஏற்காடு காஃபி தோட்டங்களுக்குப் பிரபலமானது. அதேநேரத்தில் கடை ஒன்றில் காஃபி குடிக்கச் சென்ற நேரத்தில் ஏற்பட்ட யோசனையால், காஃபி கடையைத் தொடங்க ஆர்வம் பிறந்தது.
 எனது சகோதரர் யுவராஜுடன் இணைந்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காஃபி தோட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டு காஃபி பயிரிடுதல் குறித்து ஆய்வு செய்தோம். தொடர்ந்து காஃபி கடையை வைப்பதற்காக பெங்களூரில் உள்ள மத்திய காஃபி வாரியம் சார்பில் வழங்கும் சான்றிதழ் பயிற்சி வகுப்பில் சேர்ந்தோம். காஃபி தோட்டம், செயல்முறை விளக்கம் என பல்வேறு அனுபவங்களுடன் பயணித்து இறுதியாக சேலத்தில் காஃபி கடையை வைத்தோம்.
 இதற்கென தமிழகத்தில் முதல் முறையாக பிரத்யேக டி டிரிக் எனும் காஃபி கொட்டைகளைப் பதமாக, தரமாக வறுக்கும் இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்து பெற்றோம். நாடு முழுவதும் கிளைகளை அமைத்துள்ள காஃபி டே கடையில் கிடைப்பதை விட மிக குறைந்த விலையில் ரூ. 75-க்கு தரமான காஃபி தயாரித்து வழங்கினோம். மருத்துவர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றோம்.
 மேலும் மை காஃபி என்ற பெயரில் சுவையான பல்வேறு வகையான காஃபி பவுடரை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
 இதற்கு அடுத்து என்ன செய்வது? என யோசித்த நிலையில் விவசாயிகள், காஃபி தோட்ட உரிமையாளர்களிடம் தரமான காஃபி கொட்டைகளை வாங்கி அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
 பெரிய எஸ்டேட் உரிமையாளர்களிடம் நேரில் சென்று தரமான காஃபி கொட்டைகளை வாங்கி அவர்கள் நிறுவன தயாரிப்பில் சந்தைப்படுத்தவும் செய்கிறோம்.
 இதுதவிர சுரபி ஏஜென்சி என நிறுவனம் தொடங்கி அதன் மூலம் காஃபி கொட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்காடு காஃபி கொட்டைகளை சர்வதேச தரத்தில் அனுப்புவதற்கு பேசி வருகிறோம். விரைவில் பல வெளிநாடுகளில் ஏற்காடு காஃபி ஏற்றுமதி செய்வதில் ஆர்வமாக உள்ளோம்.
 காஃபி பழங்களை வாங்கி, பின்னர் தோலை நீக்கி நல்ல தரமான பச்சை காஃபி கொட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதை வறுத்து தருகிறோம். இதற்கான அனைத்து நவீன உபகரணங்களையும் வைத்துள்ளோம். அடுத்து காஃபியில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். விரைவில் மகளிருக்கான சோப் மற்றும் பேசியல் பேக், ஸ்கரப் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளோம் என்றார்.
 ஆர். ஆதித்தன். படங்கள்: வே. சக்தி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT