தொழில் மலர் - 2019

பாரம்பரிய உணவு: ஆரோக்கிய வருமானம்!

1st Nov 2019 01:10 PM

ADVERTISEMENT

உணவின் மூலமாக உடலைக் காக்கலாம். உடல் உறுதிக்கு பிரதானம் நல்லுணவே. தற்போது, பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதுசார்ந்த உணவு உற்பத்தி, விற்பனைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது.
 புதுச்சேரியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ராசி. ராமலிங்கம் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், இளைஞர்கள், மகளிருக்கும் கற்றுக் கொடுத்து அவர்களையும் தொழில்முனைவோராக மாற்றி வருகிறார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 உணவுப் பழக்கவழக்க மாற்றத்தால் ஏற்படும் நோய்களுக்கு உணவே மருந்து. நான் காலங்காலமாக பாரம்பரிய உணவு உற்பத்தி, சிறுதானிய, ஆரோக்கிய உணவுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன்.
 சிறுதானியத்தை மதிப்புக்கூட்டி நான் தயாரித்து வழங்கும் பீட்சா, பர்கர் அதிகளவில் விற்பனையாகின்றன.
 குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரிக்கப்படும் சிறுதானிய இனிப்பு உணவுகளும் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகின்றன.
 இது தற்போது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக வளர்ந்துள்ளது.
 இளைஞர்கள், குடும்பத் தலைவிகள் பாரம்பரிய உணவுப் பொருள்கள் உற்பத்தி, விற்பனைத் தொழிலில் ஈடுபட்டால் நிச்சயம் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும்.
 இதற்கான மூலப்பொருள்கள் கிராமங்களில் தாராளமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், லாபத்தை இரட்டிப்பாக்க முடியும்.
 உதாரணமாக, முளை தானிய பால் மிக்ஸ், களி மிக்ஸ், இனிப்பு களி மிக்ஸ், காய்கறி கஞ்சி மிக்ஸ், மூலிகை இட்லி மிக்ஸ், வகை வகையான கீரை தோசை மிக்ஸ், சிறுதானிய சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி, அடை மிக்ஸ், தானிய குழம்புகள் மிக்ஸ், விதவிதமான கட்லெட் மிக்ஸ், சிறுதானிய துவையல், பொடிகள் மிக்ஸ் உள்ளிட்டவற்றைக் கூறலாம்.
 இந்தத் தொழிலைப் பலருக்கும் நான் கற்றுக் கொடுத்து வருகிறேன். மண்பானை சமையல், செம்புப் பாத்திர சமையல், அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லா சமையல், சிறுதானிய சமையல், காய்-கனி-மலர் சாறு சமையல், சாத்வீக திருக்கோயில் சமையல் செய்வது குறித்தும், சிறுதானிய ஊட்டச்சத்து உணவுகள், இணை உணவுகள், சிறுதானிய சிற்றுண்டிகள், அடுமனை பண்டங்கள், மருத்துவப் பொருள்கள், இயற்கை பழச்சாறு வகைகள், வாழ்வியல் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியம் சார்ந்த உணவுப் பொருள்கள் உற்பத்தி, விற்பனை குறித்து பயிற்சியளிக்கிறேன் என்றார் அவர்.

-க.கோபாலகிருஷ்ணன்
 படங்கள்: கி.ரமேஷ் (எ) ஜெயராமன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT