தொழில் மலர் - 2019

ஏற்றுமதி: பிரகாசிக்கும் வடலூர் அகல் விளக்குகள்

1st Nov 2019 01:06 PM

ADVERTISEMENT

அகம், புறம் இருள்களை நீக்கும் தன்மை கொண்ட அகல் விளக்குகள் வீடுகளிலும், ஆலயங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புறத்தில் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீப ஒளியானது, அகல் விளக்கில் ஏற்றி வைத்து ஒளி வழிபாடாக மேற்கொள்ளும் போது அக இருளை நீக்கி மனிதனை மேன்மையடச் செய்கிறது. எனவே, ஆன்மிகத்தில் ஜோதி வழிபாடு எப்போதும் சிறப்பானது. அந்த ஜோதி வழிபாட்டுக்கு உச்சமாகத் திகழ்வது கடலூர் மாவட்டம், வடலூரில் செயல்பட்டு வரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கம். வள்ளலாரால் உருவாக்கப்பட்டு ஜோதி வழிபாட்டை உலகுக்கு விளக்கி வரும் வடலூரில் இருந்து, உலக நாடுகளுக்கு அகல் விளக்குகள் ஏற்றுமதியாகின்றன.
 களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு அழகான அகல் விளக்கு உருவாக்கப்படுகிறது.
 இருளை அகற்றி மங்கலத்தைக் கொண்டு வருவதால், விழாக்களில் முதல் நிகழ்வாக விளக்கு ஏற்றப்படுகிறது.
 மதங்கள், இனங்கள், மொழிகளைத் தாண்டி அகல் விளக்குகளை பல்வேறு நாட்டு மக்களும் நேசிப்பதால், அதன் தேவை அதிகரித்தது. இதற்காக அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அகல் விளக்கு தயாரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
 இந்திய அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் கடலூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், வடலூர், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
 அந்த வகையில், வடலூர் சிட்கோ தொழில்பேட்டையில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் புகழ் பெற்றவை.
 வடலூரில் செராமிக் தயாரிப்பு கூடம் நடத்தி வரும் ம.கிறிஸ்துராஜ் கூறியதாவது:
 கடந்த 15 ஆண்டுகளாக நவீன இயந்திர தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையாகவும், பாராம்பரிய அகல்விளக்குகளின் இலக்கணங்கள் மாறாமலும் உருவாக்கி வருகிறோம்.
 கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, லண்டன், சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளுக்கு அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை கப்பல்கள் மூலமாக உலகத் தமிழர்களின் இல்லங்களுக்கு சென்றடைகின்றன. நிகழாண்டில் இதுவரை 5 கோடி அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
 ஐந்து திரி விளக்குகள், குத்துவிளக்கு, தாமரை விளக்கு, ஒருமுக விளக்கு, பூ வடிவிலான விளக்கு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வடிவங்களில் அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 திருநெல்வேலி அல்வாவின் சுவைக்குக் காரணமே தாமிரவருணி தண்ணீர் என்று கூறப்படுவதைப் போல, விருத்தாசலம் எருமனூரில் கிடைக்கும் மண்தான் அகல் விளக்குக்கு பிரதானம். அதை மாவாக அரைத்து அத்துடன் வெள்ளை மண், கூழாங்கல் மண், தரணிபாளையம் மண், ஆலிவ் ஆயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை பிட்டு போல கலந்து, இயந்திரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து அகல் விளக்குகள் உருவாக்கப்படுகின்றன. அவை மெருகேற்றப்பட்டு காய வைக்கப்படுகின்றன.
 பின்னர், 30 ஆயிரம் அகல் விளக்குகளை கில்லன் எனப்படும் இயந்திர உலையில் சுட வைக்கிறோம். மண்விளக்காக இருந்தாலும் இவை கீழே போட்டாலும் உடைவதில்லை என்பது இதன் சிறப்பு. வட இந்தியர்களுக்காக ஸ்வஸ்திக் சின்னத்துடன் 50 லட்சம் அகல் விளக்குகளை விற்பனை செய்துள்ளோம்.
 தொழிலாளியாக பணியாற்றிய எனக்கு, நாம் ஏன் முதலாளியாகக் கூடாது என்று மனதுக்குள் எழுந்த ஒற்றைக் கேள்வியே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
 அகல் விளக்குகளைச் செய்யும் இயந்திரங்கள் ஒவ்வொன்றையும் நானே உருவாக்கினேன். மண்ணையும், உழைப்பையும் நம்பினேன். இப்போது செய்யப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட அகல் விளக்கு வடிவங்கள் என் மனதில் உருவானவை. இன்னும் புதிய புதிய வடிவங்களில் உருவாக்கி மக்களுக்கு விரைவில் வழங்குவேன்.
 அனைத்து மதத்தினரும் அகல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். மதங்களை ஒன்றிணைக்கும் சக்தி அகல் விளக்குகளுக்கு உள்ளன என்பதால், இந்தத் தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகிறேன்.
 கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக உலகம் முழுவதும் 500 கோடி அகல் விளக்குகள் தேவைப்படுகின்றன. இவற்றில்,10 சதவீதத்தை ஆர்வமுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து, இயந்திரங்களையும் மூலப்பொருள்களையும் வழங்கி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் சிறு சிறு தொழிற்சாலைகள் நிறுவி அகல் விளக்குகள் உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிப்பதே எங்கள் நோக்கம் என்றார் அவர்.
 -ச.முத்துக்குமார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT