அத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை.
அத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் சமூகத்தினரின் பகைவர்

ரிக் சமூகத்தினரின் பகைவர் யாவர்? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்வியல் என்ன? சமயநிலை என்ன? இவ்வெதிரிகள் எங்கிருந்தனர்? போன்றவற்றை ரிக்கின் யுத்த நிகழ்வுகளில் இருந்தும் பகைவர் மீதான சித்தரிப்புகளில் இருந்து மீட்டெடுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது. ஏனெனில், ரிக் காட்டும் யுத்தங்கள் எளிதில் புறக்கணிக்கத்தக்க யுத்தங்களாக இருப்பனவல்ல. எல்லோரும் நம்புவதுபோல் வெற்றிகொண்ட குழு தோல்வியடைந்தவர்களை அடிமைகளாக்கிக் கொண்டது அல்லது அவர்களின் பூர்வீக இடத்தை விட்டுத் துரத்தியது அல்லது தங்களுடன் கரைத்துக்கொள்வது என்பது போன்றதல்ல இவற்றின் விளைவு.

இந்த யுத்தங்களில் பெரிய மற்றும் சிறிய யுத்தங்கள் பல இருக்கின்றன. இவற்றைக் காலமுறை வரிசைப்படி ஆய்வது சிக்கலுடையதாக இருக்கிறது. ரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை. அதன் உச்சகட்டப் போர், சப்த சிந்துவுக்கு வடக்கே இமயமலைச் சார்பு நில நிலங்கள் அல்லது இமயமலைச் சார்பு மலைகளில் நடந்தது. இப்போர்கள் ஒருபோதும் ஹரப்பா, மொகஞ்சதாரோ, சாஞ்சிதாரோ, மெகர்கர், லோத்தல், காலிபன்கன் ராகிகார்ஹி போன்ற புகழ்பெற்ற சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்ட நகர இடங்களில் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கவில்லை. தேடுதல் இன்னும் பலபடி முன்னேற வேண்டியுள்ளது. விருப்பு வெறுப்பு மற்றும் முன்தீர்மானம் ஏதுமின்றி நடத்தப்பட வேண்டியுள்ளது.

ரிக் சமூகத்தினர் சிந்துப் பகுதிகளை, அதாவது ஹரப்பா, மொகஞ்சதாரோ உள்ளிட்ட சிறந்த நகர நாகரிகப் பகுதிகளைக் கடக்கும்பொழுது என்ன எதிர்ப்புகளை, என்ன மக்களிடம் இருந்து பெற்றனர் என்பதற்கு ரிக்கில் சான்றில்லை. இன்றைய ஆப்கானிஸ்தான் முதல் யமுனை நதிக்கரை வரையிலும் தெற்கில் குஜராத் – லோத்தல் – பகுதி வரையிலும் பரவியிருந்த சிந்து நகர நாகரிகத்தின் எல்லைகளை நாம் இன்னும் சரியாக வரைபடமாக்க முடியாது இருக்கிறோம். நான்கு திசைகளிலும் போடப்படும் புதிய அகழாய்வுக் குழிகள் இதன் எல்லையை விரிவடையச் செய்கிறது. போதுமான அகழாய்வுக் குழிகள் போடப்படாததால் எல்லையை இறுதி செய்வதில் இடர் உள்ளது. தற்பொழுது சிந்துப் பகுதி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் இந்தியா என மூன்று நாடுகளைச் சார்ந்த பகுதிகளில் இருந்துதான் சிந்துவெளியின் எல்லையை அமைக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இம்மூன்று நாடுகளுடன் கஜகிஸ்தான் பகுதியையும் ரிக் மக்கள் இமயமலைப் பகுதிவாழ் மக்களுடனும் பகை கொண்டிருந்தனர் என்பதால், திபெத் பகுதியையும் இணைத்துக்கொள்ள விரும்பலாம். இவ்வாறு, ஐந்து நாடுகளைச் சார்ந்து இருப்பதே எல்லை பற்றிய முடிவு எடுக்கப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாக உயுள்ளது.

பரப்பின் எல்லையை வகுப்பதில் உள்ள பிரச்னை போலவே, இதன் காலகட்டத்தை வகுப்பதிலும் பிரச்னை உள்ளது. தோலாவீரா, ராக்கிகார்ஹி போன்ற இடங்களின் கரிம ஆய்வுகள், இதன் தொடக்க காலகட்டத்தை மு.பொ.ஆ.6000 வரை கொண்டு செல்கின்றன. இருந்தும், சிந்துப் பகுதி மக்கள் தங்களின் செழிப்பான வாழ்வியலை, முதிர்ந்த பண்பாட்டை, வியக்கவைக்கும் நாகரிகத்தை மு.பொ.ஆ.2700 முதல் மு.பொ.ஆ.1500 வரை வெளிப்படுத்தினர் என்பது இன்றுவரை ஒரு பொது காலவரை சார்ந்த நிலைப்பாடாக உள்ளது.

மு.பொ.ஆ.6000 இருந்து மு.பொ.ஆ. 1500 வரை ஏறத்தாழ 4500 ஆண்டுகள் சிந்து மக்கள் தொடர்ச்சியாக ஒரு புள்ளியில் குவிந்திருக்கும் பண்பாட்டை வெளிப்படுத்தினார்கள் என்பது வியப்பான ஒரு செய்தி. இதில் முக்கியமாக மூன்று செய்திகளை நாம் குறித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

1. இவர்கள் நலிவடையும் வரை இனக்குழு தலைமையிலோ அல்லது அரச நிலைக்கு உயராத வேளிர் தலைமையிலோ இருந்துள்ளனர். வேளிர் தலைமையும் பிற்காலத்தில் உருவான சமூக அரசியல் நிலைப்பாடாக இருந்திருக்க வேண்டும். இதனால் எகிப்திய வழிப்பட்ட அரசு முறைப்பட்ட வரலாற்றை சிந்துப் பகுதியில் தேடும் எந்த ஒரு வரலாற்று ஆசியர்களும், அவ்வகைக்கான தொல்பொருள்களைத் தேடும் தொல்லியலாளர்களும் தொடர்ந்து மேற்செல்ல முடியாது தேக்கமடைகின்றனர். (நலிவடைந்த பிறகு தம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக்கொள்ளவே இவர்கள் ரிக் விவரிக்கும் எதிரி மன்னர்களை தலைவர்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து பின்னர் விளக்கப்படும்).

2. மத குருக்கள் தலைமை சில பகுதியில் இருந்திருக்கிறது. இந்த மத குருக்கள் என்போர் நூல்களால் வழிநடத்தப்படும் மத குருக்களில் இருந்து வேறானவர்கள். சாமியாடிகளாக இருக்க வேண்டும்.

3. ஏறத்தாழ 4500 ஆண்டுகள் ஒரு புள்ளியில் குவிந்த ஒத்த பண்பாட்டை வெளிப்படுத்திய சிந்து மக்கள், போர் ஆயுதங்களை உற்பத்தி செய்துகொள்ளவில்லை. இவ்வளவு நீண்ட காலகட்டத் தொடர் வாழ்வியலுக்கும் மிகப் பரந்த பரப்பினை தற்காத்துக்கொள்வதற்கும் ஆயுதங்கள் இன்றி இவர்கள் இருந்துள்ளனர்.

ரிக் சமூகத்தின் பகைவர்களான இவர்கள் ஒரு புள்ளியில் குவிந்த ஒத்த பண்பாட்டினை வெளிப்படுத்தினாலும், இவர்கள் சிறுசிறு குழுக்களாக நகர நாகரிகத்தில் வாழ்ந்தனர்; பல குழுக்கள் ஒருமித்துப் பூசல் பகையற்று வாழ்ந்தனர் என்று அணுமான ஒரு முடிவினைத் தவிர வேறு ஒன்றை அடைய முடியவில்லை. அல்லது போர் அல்லது ஆயுதங்கள் பயனாகும் இடங்களில் அதனை முறியடிக்க ஆயுதங்களற்ற ஒரு அமைப்பை நிறுவியிருக்க வேண்டும். இந்த அமைப்பே போர் போன்ற ஆயுதம் ஏந்தும் பிரச்னைகளை அவையற்றே தீர்த்து வைத்திருக்க வேண்டும். இதனால் அவ்வப் பகுதியின் பூர்வகுடி மக்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம், அதாவது ஆயிரக்கணக்க ஆண்டுகள் அமைதியாகவும் இடம் பெயராமலும் வாழ்திருப்பது எளிதாகியிருக்கின்றது; சாத்தியமாகியிருக்கிறது. இதனால்தான், உலகின் வேறு எந்த மூத்த நாகரிகங்களும் வெளிப்படுத்தாத மக்களின் வாழிடங்களை மட்டுமே சிந்து நாகரிகம் தன் நாகரிகத்தின் எச்சமாக வெளிப்படுத்தி வருகின்றது.

இப்பின்னணியில், பலூசிஸ்தான் போன்ற சிந்து நாகரிகப் பகுதிகளைக் கடந்துவந்து சப்த சிந்துப் பகுதி என்ற பஞ்சாப் பகுதியில் குடியேறி, பின்னர் இயற்றப்பட்ட ரிக் பாடல்கள் காட்டும் காட்சி சற்று வேறுபட்டது. ரிக் சமூகத்தினர் பெருமளவு போர் ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் இப்பகுதியின் பூர்வகுடிகள் மீது தொடர்ந்து போர்புரிந்தனர். இக்காலத்தே பூர்வ குடிகள் அகழாய்வுகள் வெளிப்படுத்தாத போர் ஆயுதங்களையும் அரசர்களையும், இனத்தலைவர்களையும் கொண்டிருந்தனர். வணிகர்களான “பணி”களும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தனர். பூர்வகுடிகளிடம் குதிரைகளும், குதிரை மந்தைகளும், பசுக்களும், கால்நடைகளும், போர்த்தேர்களும் இருந்தன. இம்மாற்றம் எப்பொழுது உருவானது. மு.பொ.ஆ.1500 அளவில் ரிக் சமூகம் சப்த சிந்துவில் நுழைந்தது என்றால், அதற்கு முன்னரே வேளிர்கள் அரசு உருவாக்கத்தில் இறங்கியிருக்க வேண்டும். இதற்கு குறைந்தது மூன்று நான்கு தலைமுறைகள் தேவைப்பட்டிருக்கும். ஒரு 100 ஆண்டுகள் அல்லது இன்னும் சிறிது கூடுதலாக.

இங்கு சிந்து நாகரிகத்தின் முடிவு குறித்து உள்ள செய்திகளை ஆலோசித்தால், தொடர்ச்சியான வறட்சி, ஆறுகளின் திசைமாறிய ஓட்டம் போன்ற இயற்கைப் பேரிடர் முன் நிற்கிறது. எனில், நிலையான ஓரிடத்து பல தலைமுறை வாழ்வு, உறுதியான செங்கற்களால் ஆன கட்டடங்களில் வாழ்ந்த சிந்து மக்கள் அவற்றைக் கைவிட்டு, பெருமளவில் பாதுகாப்பான வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் பெரும் நிலப்பகுதியையும், பல சமூகத்தினரையும் கடக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கும். அந்நிலையில் இவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் தேவையாக இருந்திருக்கும். அப்பொழுது வலிமையான தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியிருக்க வேண்டும். அப்பொழுது பல குழுக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியமும் உருவாகியிருக்க வேண்டும். அப்பொழுது வலிமையான வேளிர்களும் அரசுகளும் அரசர்களும் உருவாகியிருக்க வேண்டும். ரிக் காட்டும் பகை அரசர்கள் இவர்களே.

தாசன் & தஸ்யு - ரிக் சமூகத்தின் பகைவர்

ரிக் சமூகத்தினரின் பகைவர்கள் பெரும்பாலும் தாசன் என்று தனி நபரையோ, தாசர் இனக்குழுவையோ குறிப்பிடப்படுகின்றனர். இதுபோன்றே தஸ்யு என்ற பதமும் தனிநபரைக் குறிக்கவும் இனக்குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிலபொழுது சூத்திரன் என்றும் சொல்லப்படுகின்றது. இன்னும் சிலபொழுது அசுரர் என்றும் சொல்லப்படுகின்றது. இவர்களின் மற்றொரு முக்கிய எதிரி பணி என்ற வணிகர்கள் ஆவர். இருந்தும் யாரெல்லாம் தாசன், தஸ்யு, பணி சூத்திரன், அசுரர் என்று குறிப்பிடப்பட்டுகின்றனர் என்பது ஒரு விவாதப்புள்ளியாகவே நீடிக்கின்றது. பொதுவான அறிதல்களில் இருந்து இவர்களுள் பணி என்போர் வணிகர்கள் ஆவர். தாசன் என்போர் வடஇந்தியப் பூர்விகத் தமிழ் குடிகள் ஆவர்; தஸ்யு என்போர் கிராதர் என்ற மங்கோலிய மான் கொமர் இனத்தினர் ஆவர்.

இவர்களின் முக்கியக் குணங்கள், வாழ்வியல், சமய நிலை, பொருளாதார நிலை என்ன என்பது நமக்குப் பண்பாட்டு ரீதியான வேறுபாடுகளை வழங்குகின்றன.

ரிக் சமூகம்

1. மேய்த்தல் தொழில்.

2. இவர்களது ஆநிரைச் செல்வவளம், வேளாண் மற்றும் வணிகச் சமூகங்கள் ஈட்டிய செல்வத்தைவிடக் குறைவே.

3. வேள்வி செய்தல். வேள்வியே வழிபாட்டின் மூலமாக இருத்தல்.

4. மேய்த்தல் தொழிலுக்கு உரிய பருவகாலம் சார்ந்த தாற்காலிக அல்லது நிரந்தர இடப்பெயர்வு. அதனால், பிரித்து எடுத்துச்செல்லும்படியான மரம் மற்றும் புல்லால் ஆன வசிப்பிடக் கட்டுமானங்கள். அதற்குத் தேவையான வண்டி வாகனங்கள்.

5. அடிப்படையில் கருத்து முதல்வாதச் சிந்தனையோடு கூடிய வழிபாட்டு, சடங்கு முறைகள்; இருடிகளின் எல்லையற்ற செல்வாக்கு.

6. இனக்குழு வாழ்க்கை, ஆண் தலைமை.

7. கருத்து முதல்வாத சிந்தனைகள்.

பகைச் சமூகம்

1. வேளாண்மையும், வணிகமும் சார்ந்த தொழில். அதே சமயத்தில் இவர்கள் ஆநிரைச் செல்வத்தை விலக்கியவர் அல்லர். இவர்கள் இடம்பெயரா மேய்த்தல் தொழிலும் புரிந்தவர்கள் எனலாம். இவர்கள் புல்வெளிகளை நாட வேண்டிய அவசியமற்று, அவர்களது வேளாண்மையே கால்நடைகளுக்குத் தேவையான புல், தட்டைகளை வழங்கியது.

2. வேளாண்மையும், வணிகமும் இவர்களுக்கு மேய்தல் தொழில் புரிந்த சமூகத்தினரைவிட அதிக செல்வதை வழங்கியது.

3. வேள்வியை மறுத்தல்.

4. நிரந்தர உறுதியான வாழ்விடக் கட்டுமானங்கள். செங்கல், கருங்கல் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் என்று அழைக்கப்பட்டன. அரசர் வாழிடங்கள் புரி, அதாவது கோட்டைகள் என அழைக்கப்படும்.

5. அடிப்படையில் பொருள் முதல்வாதச் சிந்தனையோடு கூடிய வழிபாடு, சடங்கு முறைகள்.

6. தாய்வழிச் சமூக வயப்பட்ட இனக்குழு வாழ்க்கை; பெண் தலைமை, அல்லது சமூகத்தை வழிநடத்துவதில் பெண்களுக்கு மிகுதியான பங்கு; போர் போன்ற நிகழ்வுகளில் ஆண் தலைமை. இனக்குழுவில் இருந்து வேளிர், அரசுகள் உருவாகத் தொடங்கிய காலகட்டம்.

7. பொருள் முதல்வாதச் சிந்தனைகள்

இந்த ஏழு புள்ளிகளும் ரிக் மற்றும் அவர்களது பகைச் சமூகங்களின் அடையாளங்களாக இருக்கின்றன. போர்களுக்கு இவ்வேறுபட்ட அடையாளங்களே காரணிகளாகின்றன.

ரிக், வேறு எக்காரணத்தையும்விட தங்களின் ஆநிரைகளைப் பணிகள் முதலான பகைவர்கள் கவர்ந்து சென்றுவிட்டனர் என்றும் தங்களைவிட தம் பகைவரிடத்தில் பசு, குதிரை, பொன் முதலான பெருஞ்செல்வம் குவிந்துள்ளது என்றும் பலப்பலவாகக் குறிப்பிடுகின்றனர். தம் பகைவரது அளப்பரிய செல்வத்தை தாங்கள் பெற தாங்கள் வகுத்துள்ள போரில் தம் பக்கமாக இருந்து உதவி, வெற்றிபெற்றுத்தர வேண்டும் என்று இந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களை வேண்டுகின்றனர்.

பசுக்களை விரும்பும் காவிட்டி யுத்தத்தில் இருந்து மாறுபாட்ட  பகை யுத்தத்தின் காட்சி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com