அத்தியாயம் 73 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தமிழர் மரபில், பொங்கல் திருநாளைத் தொடர்ந்து வரும் கரிநாள் விழா, உண்மையில் முன்னோரை வழிபட்டு, அவருக்கு நன்றி செலுத்தும் வழிபாடாகும்.

முன்னோர் வழிபாடு (Ancestor Worship)

தொல் சமயத்தில் முக்கிய இடம் பெற்றிருந்த மற்றொரு வழிபாடு முன்னோர் வழிபாடு. ‘முதிர்ச்சியடையாத மனப்பக்குவமுடையோரின் சமய நம்பிக்கையே முன்னோர் வழிபாடு’ என டைலர் மற்றும் ஹெர்பர்ட் ஸ்பென்சர் போன்ற மானிடவியலாளர் மதிப்பிட்டனர். தொன்மைக் குடியினர், இறப்புக்கும் இறப்புக்குப் பின்னர் நிகழும் செயலையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தனர். அதனால் ஏற்பட்ட மருட்சியினால் இறந்தோரின் ஆவிகளை வழிபடத் தொடங்கினர் என்றும் இவர்கள் குறிப்பிட்டனர். (இதனை மேலும் விளக்கமாக ஆவி வழிபாடு குறித்த யுத்தபூமி தொடர், அத்தியாயம் 67-ல் காண்க).

முன்னோர் வழிபாடும் இன்றளவிலும் நீடித்து வரும் வழிபாடாக உலகின் எல்லாப் பகுதியிலும், எல்லாப் பண்பாட்டை உடைய மக்களிடையேயும் காணமுடிகிறது. முன்னோர் வழிபாடு என்பது மூதாதையர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு, சான்றோர் வழிபாடு, ஆன்றோர் வழிபாடு போன்றும் தமிழில் குறிக்கப்படுகிறது. ஆன்றோர் வழிபாடு என்பது முன்னோர் வழிபாட்டின் வளர்ச்சி அடைந்த நிலை என்றும் கருதப்படுவதும் உண்டு.

முன்னோர் வழிபாடு குறித்து பல விளக்கங்களும் கோட்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

சிங்மண்ட் ஃபிராய்டு தம்முடைய குலக்குறியும் விலக்கும் கட்டுரையில், ‘இறந்தோரிடத்தில் காட்டும் அச்சமும் மரியாதையும் உறவினர்களிடையே உள்ள தொடர்பினை வலியுறுத்துவதாகும்’ என்று சுட்டுகிறார். ‘இதனால் வாழுங்காலத்தில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க முயற்சி செய்வர். அன்பு, ஆதரவு இல்லாதவர் இறந்த பிறகு தீயவற்றை செய்வர் என்று நம்பியதால், வாழுங்காலத்தில் ஒருவருக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்ற நடைமுறை தோன்றியது’ என்வும் விளக்குவார். மெயர் ஃபோர்டெஸ் என்பவர், ‘முன்னோரிடம் கொண்ட அச்சத்தினால் முன்னோர் வழிபாடு நடைபெறவில்லை. மாறாக, முன்னோர்களை நல்ல முறையில் நடத்தாதவர்கள் இக் குற்ற உணர்வில் இருந்து விடுபடுவதற்காகவே இவ்வழிபாட்டை நடத்தினர்’ என்று குறிப்பிடுகிறார். முன்னோர் வழிபாடு, வழிவழியான அதிகாரத்தைப் பெறுவதை மையமிட்டும், சொத்துரிமை நிலைநாட்டவும், வாரிசுரிமையை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்டது எனவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் உரிமை, உறவு ஏதுமற்ற நிலையிலும் அன்பு காரணமாகவும் இறந்தோர் வழிபடப்படுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெளிவித்திருக்கின்றன.

பழைய கற்காலப் பண்பாட்டிலேயே மூதாதையர் வழிபாட்டினைக் காணமுடிகிறது. ஐரோப்பியப் பகுதிகளில் கிடைக்கும் பழைய கற்கால மனிதர்கள் மேற்கொண்ட முறையான சவ அடக்கச் சான்றுகள் இதனை உறுதி செய்கின்றன. இந்திய அளவில் உறுதியான சான்றுகள் சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து கிடைக்கின்றன. இடைக் கற்காலத்தை, அதாவது நுண் கற்காலத்தைச் சார்ந்த ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் பகுதிகளில் கிடைக்கும் முன்னோரை பக்குவமாக அடக்கம் செய்த சான்றுகள் சிந்துவெளிக்கு முற்பட்டவை. புதிய கற்காலத்தில், இறந்த முன்னோரை குடியிருப்புகளிலேயே அடக்கம் செய்திருப்பது இவ்வழிபாட்டுச் சிந்தனையின் முக்கியப் படிநிலை வளர்ச்சியைக் காட்டுகிறது. இது, அக்காலத்தில் உறவினர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பும், மூத்தோர் பெருமதிப்பு பெற்றவர்களாகவும் இருந்தனர். இதனால் ஒரு குடும்பத்தில் மூத்தோர் இறந்துபின்னரும் அவரை மதித்து வழிபட்டனர். உடல் இறந்துபட்ட பிறகும் அவரது ஆவி என்ற ஆன்மா நிலைத்திருக்கும்; அது தம் உறவுகளைப் பாதுகாக்கும், வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால், அவரது உடலை வீட்டிலேயே புதைந்தனர். இது, தங்களின் முன்னோர் ஆன்மா அமைதிகொள்ளும் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தது தெரிகிறது.

தென்னிந்தியாவின் பெருங் கற்கால பண்பாட்டுச் சின்னங்களான கல்திட்டை, கல்பதுக்கை, கல்பதுக்கை போன்ற கல்திட்டை, குத்துக்கல், கல்வட்டம், கற்குவை, பரல் உயர் பதுக்கை, தாழி, பேழை போன்ற அனைத்தும் முன்னோர் வழிபாடு பெற்ற சிறப்பிடத்தை உரக்கச் சொல்பவையாக இருக்கின்றன. முன்னோர் வழிபாட்டில், பெருங் கற் சின்ன வகையின் அறுபடா தொடர்ச்சியாக இருப்பதே நடுகல் பண்பாடாகும்.

புராணிக அல்லது தொன்ம முன்னோரும் உண்மை முன்னோரும் (Mythical and real ancestors)

தொன்மைக் குடியினரிடையே, இறந்த முன்னோர்கள் பற்றிய எண்ணங்கள் பலவாறாக உள்ளன. பழங்குடிச் சமுதாயங்களில் குல அமைப்பும் கால்வழி அமைப்பும் (Clan and Lineage) வலிமையாக இருக்கின்றன. இச்சமுதாயத்தில் குல முன்னோர் அக்குலத்தவர் மற்றுமல்லாது, கால்வழியினராலும் வணங்கப்படுகிறார். இந்தவகையில், இச்சமுதாயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னோர் வழிபாட்டுக்கு உரியவராகின்றனர். மேலும், அவரவர் தம்தம் குலம் யாருக்கும் நினைவில் இல்லாத மிக நீண்ட காலத்துக்கு முற்பட்ட ஒரு முன்னோர் வழி தோன்றியது எனக் கருதுவர். இந்த நினைவுக்கு எட்டாத முன்னோரை ‘தொன்ம அல்லது புராணிக முன்னோர்’ எனக் குறிப்பிடுகின்றனர். ‘உண்மை முன்னோர்’ என்பவர் சந்ததியினர் அனைவரும் நன்கு அறியும் நிலையில் வாழ்ந்து மறைந்த ஒருவராக இருப்பார்.

மானிடவியல் சான்றுகள், இன வரைவியல் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள் கொண்டு பார்க்கும்பொழுது, முன்னோர் வழிபாடு மூன்று வழிபட்டதாக இருப்பதைக் காணமுடிகிறது.

1. புகழுடைய செயல்புரிந்து மாய்ந்த வீரர் வழிபாடு.

2. குடித் தலைவர், குலத் தலைவர், இனத் தலைவர் போன்று சமூகத்தின் தலைமை நிலை அடைந்தவர்; உயர் மதிப்பு பெற்றவர்கள் இறந்த பிறகு அவரை வழிபடுவது.

3. குடும்பத் தலைமையை வழிபாடு.

இம்மூன்று பிரிவுகளிலுமே ஆண், பெண் இருபாலரும் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கின்றனர். முதல் இரு பிரிவு, அதாவது வீரர் மற்றும் தலைமை அல்லது உயர்மதிப்பு பெற்றவர் வழிபாடு, குடும்ப வழிபாட்டுக்கு மட்டுமல்லாது குடி, குல தெய்வம் அல்லது கிராம தெய்வம் அல்லது ஊர் தெய்வம் போன்று பரவலாக வழிபடும் நிலைகளை அடைவதும் உண்டு. மூன்றாம் பிரிவான குடும்பத் தலைமை, பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் சந்ததியினரால் மட்டும் வழிபடப்படும் நிலையைப் பெற்றதாகும்.

முன்னோர் வழிபாடு உலகின் எல்லா நிலப்பரப்பிலும், எல்லா இன மக்களிடையேயும் விரவியுள்ளது. சமயத் தெய்வங்களின் மீதான வழிபாட்டு நம்பிக்கையை விடவும் ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. ‘இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும்பங்கு வகிக்கின்றது’ என்ற கருத்தாக்கம், முன்னோர் வழிபட்டின் வித்தாக அமைந்துள்ளது. இதனால், முன்னோர் வழிபாடு வளமை வழிபாடாக விளங்குகிறது. இவ்வழிபாட்டின் நம்பிக்கையும் நோக்கமும் பலவகைப்பட்டதாக இருக்கிறது. அவற்றுள் சில -  

1. இறந்த முன்னோரின் ஆற்றலும், அனுபவமும் வாழ்வோரை செழுமைப்படுத்தும்.

2. இறந்தவர்கள் உயிருடன் வேறோரிடத்தில் வாழ்கிறார்கள்; அவர்கள், வாழ்பவரின் செழுமைக்கும், நலத்துக்கும் உதவ இருக்கின்றனர்; இறப்புக்குப் பிறகு இறந்தவர் கடவுளாக வந்து உயிரோடு இருப்பவரை வழிநடத்திச் செல்வர்.

3. இறந்தோரின் விருப்பங்களையும் அவர்களுக்குப் பிடித்தமானவற்றையும் நிறைவேற்றி வழிபடுவதன் மூலம், இம் முன்னோர், தீய ஆற்றலில் வாழும் தங்களைக் காப்பார்கள் என்றும், இவ்வாறு வழிபடுவதன் மூலம் அவர்கள் சினம் கொள்ளாமல் தங்களை அருளுடன் ஆதரிப்பர்.

4. போரில் உதவும் கால்நடைகளைப் பாதுகாக்கும், பெருக்கும், வயல்களில் விளைச்சலை அதிகப்படுத்தும்.

5. சந்ததிப் பெருக்கத்துக்கு அருளுவார்.

6. இறந்தோரின் வாழ்த்து வாழ்வோருக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.

7. சிறப்புடன், போற்றத்தகும் வாழ்வை, வாழ்ந்த வாழ்வை, செயற்கரிய வீரத்தை வெளிப்படுத்திய முன்னோரின் ஆற்றலை சந்ததியினரும் பெற வேண்டும் என்பவை இடம்பெற்றிருக்கின்றன.

முன்னோர் வழிபாட்டின் நீண்ட நெடிய வளர்ச்சி

முன்னோர் வழிபாட்டின் நீண்ட நெடிய வளர்ச்சியில் ஆவி வழிபாடு முதற்கொண்டு, குலக்குறி உட்பட போலிப்பொருள் வழிபாடு ஈராக எல்லா தொல் வழிபாட்டு நம்பிக்கையும் இணைந்து வெளிப்படுகின்றன. இதனால், முன்னோருக்குக் செய்யப்படும் வழிபாட்டில் இடத்தைக் கொண்டும், பொழுதைக் கொண்டும் வேறுபாடுகளைக் காண முடிகிறது.

தமிழர் பண்பாட்டில், இறந்துபட்ட முன்னோர் குடும்ப, குல, ஊர் தெய்வமாக இருப்பது பற்றி முன்னர் குறிப்பிட்டோம். இன்று வழக்கில் உள்ள நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பான்மையும் இறந்துபட்ட மனிதர்களை வழிபடும் முன்னோர் வழிபாட்டின் பார்பட்டதாவே உள்ளன. இவ்வாறான நாட்டுப்புற தெய்வ மரபுகளை உட்செறிந்து கொள்ளும் பொழுது, இவற்றில் இரு முக்கியப் போக்குகளைக் காணமுடிகிறது. ரத்த உறவுடைய முன்னோர் தெய்வங்கள், ரத்த உறவற்ற முன்னோர் தெய்வங்கள் என அவ்விரு போக்குகளை வகைப்படுத்திக்கொள்ள முடிகிறது.

ரத்த உறவுடைய முன்னோர் என்பதன் நேரடிப் பொருள் அறியமுடிவதாகும். ரத்த உறவற்ற முன்னோர் என்பது ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகிறது. ரத்த உறவற்ற முன்னோர் வழிபாடு உட்கிளையாக பல முகங்களைக் கொண்டுள்ளது. புலவர் அவ்வை, கபிலர் உட்பட ஆழ்வார் நாயன்மார்கள் வழிபாடு போன்றவை ஒருவகை; சமய குருக்கள் மற்றும் ஆச்சாரியர்களை வணங்கும் ஒரு வகை. பெண் தெய்வங்களில் நெருப்பில் இறங்கி உயிர் நீங்கியவரை வணங்குவதும் முன்னோர் வழிபாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது. தீப்பாய்தல் என்பது சதியோடு மட்டும் பெரும்பான்மையாக அடையாளப்படுத்தப்படுகிறது. சதி, கணவன் சிதையில் மனைவி புகுவது என்பதை மட்டும் குறிப்பிடும். ஆனால், தீய்ப்பாய்தல் பல காரணங்களால் மேற்கொள்ளப்படுகிறது. மாற்றானின் விருப்பத்தை ஏற்க மனமில்லாமல் தீப்பாய்தல், மாற்றானால் வரும் கேட்டுக்கு அஞ்சி தீப்பாய்தல், விருப்பம் நிறைவேறா விரக்தியில் தீய்ப்பாய்தல், மானபங்கம் நிகழ்ந்ததால் தீய்ப்பாய்தல்; கவரப்பட்டதால் தீய்ப்பாய்தல், நோய் தீராததால் தீய்ப்பாய்தல் போன்று பல காரணங்களைத் தொகுக்க முடியும். மேலும், கன்னியாக இறந்த பெண், அகாலத்தில் இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், பலி தரப்பட்டவர்கள், தம் உயிரை தாமே தெய்வங்களுக்குக் காணிக்கை செய்துகொண்டவர்கள் என முன்னோர் வழிபாடு, குறிப்பாக குடும்ப மற்றும் குல தெய்வமாக வழிபடப்படுவதாகக் கிளைத்துள்ளது. இவற்றுள் மாற்றான், மானபங்கம் செய்தவன், பலி தந்தவன் போன்றோர் ரத்த உறவற்றபோதும், தம் தீச்செயலால் இறந்த காரணத்தால் இறந்தவர்களை வணங்கி அவர்களிடமிருந்து வரும் தீமையைப் போக்கிக்கொள்வர். இவ்வாறு இறந்தவர்களைத் தம் குல தெய்வமாகக் கொள்பவர்களும் உண்டு. இவ்வாறும் ரத்த உறவற்ற முன்னோர் உருவாகின்றனர்.

பொதுவில், இந்திய மரபில் முன்னோர் வழிபாடு ஆண்டுதோறும் திவசம், அதாவது திதி கொடுப்பதன் மூலமும், ஒவ்வொரு அமாவாசையிலும் விரதமிருந்து முன்னோரை வழிபடுவதும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழர் மரபில், பொங்கல் திருநாளைத் தொடர்ந்து வரும் கரிநாள் விழா, உண்மையில் முன்னோரை வழிபட்டு, அவருக்கு நன்றி செலுத்தும் வழிபாடாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com