அத்தியாயம் 79 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தமிழ் மரபில் கரந்தை வீரர்கள், அதாவது நிரை மீட்டுப்பட்ட வீரர்கள் போற்றப்பட்டனர். அவரது வீரம் புகழப்பட்டது. சங்க காலத்தில் நிரை மீட்டுப்பட்ட வீரர்களுக்கே நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 79 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

வீரத்துக்கும் தான்உணர்வுக்கும் அடையாளமான நிரை மீட்புப் போர்கள்

தமிழ் வழக்கில் நிரை மீட்புப் பூசல்கள் கரந்தைப் பூசல்கள் என்று அழைக்கப்படும். இப்போரில் ஈடுபடும் வீரர்கள் கரந்தை வீரர்கள் எனப்படுவர். மேய்த்தல் சமூகத்தில், நிரை கவர்தலும் மீட்டலும் சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்கள் கொண்டு நிகழ்ந்தன. இவற்றுள் பொருளாதாரக் காரணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இச்சமூகத்துக்கு மாடே செல்வம். நிரைகளின் பெருக்கமே செல்வ வளர்ச்சி.

ஓரிடத்தில் பல மேய்த்தல் சமூகங்கள் வாழ முற்படும்பொழுது, நிரை கவர்தல் அவசியமாகிறது. மேய்த்தல் நிலம் தேடி அலையும்பொழுதும் நிரை கவர்தல் நிகழ்கிறது. இவ்வாறு நிரை கவர்தல் உருவாகும் நிரைப் பெருக்கம், இனவிருத்தியினால் உருவாகும் பெருக்கத்தைவிட அதிகம் என்பதால், நிரை கவர்தல் மேய்த்தல் சமூகத்தால் தொடர்ந்து நடப்பட்டது. கவர்தல் ஒரு திட்டமிட்ட குழுவின் செயல் என்றால், மீட்டல் தன்னெழுச்சியானது. வீரனின் ‘தான்’ உணர்வின் வெளிப்பாடு. மீட்டலில் குழுவின் செயல்பாட்டை காணமுடிந்தாலும், வீரனின் தன்னிச்சையான வெளிப்பாடு பெரிதும் போற்றப்பட்டது. தமிழ் இலக்கியம் வெளிப்படுத்தும் கரந்த வீரம் பெரும்பாலும் இதன்பாற்பட்டதே.

தமிழ் இலக்கியச் சான்றுகள் கொண்டு பார்க்கும்பொழுது, கவரப்பட்ட நிரையை மீட்பது வீரம் மிகுந்த இளைஞர்களின் பணியானது. இதனால் பகைவர்களால் கவரப்பட்ட நிரைகளை மீட்பது என்பது இளைஞர்களின் வீரத்துக்கு விடப்பட்ட அறைகூவல்போல் இருப்பதால், தன்னெழுச்சியாக நிரை மீட்டல் மேற்கொள்ளப்படுகிறது. இது இளைஞர்களின் வீரத்துக்கு அவசியமான ஒன்றாகிறது.

தமிழ் மரபில் கரந்தை வீரர்கள், அதாவது நிரை மீட்டுப்பட்ட வீரர்கள் போற்றப்பட்டனர். அவரது வீரம் புகழப்பட்டது. சங்க காலத்தில் நிரை மீட்டுப்பட்ட வீரர்களுக்கே நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. பிற்கால நடுகற்களிலும், கரந்தை வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களே எண்ணிக்கை மிகுதியாகக் கிடைக்கின்றன. நிரைமீட்ட வீரர்கள் கரந்தையர் என அழைக்கப்பட்டனர். கரந்தையரைக் குறிக்க ‘மறவர்’, ‘ஆடவர்’, ‘தறுகண் ஆளர்’, ‘இளையர்’ என பல சொற்களால் சுட்டப்படுவதைக் காணமுடிகிறது. இவை வீரத்தோடு தொடர்புடை அடைமொழி என்பது வெளிப்படை.

மேய்த்தல் சமூகம் குறித்து நிறைய செய்திகளைத் தரும் ரிக், நிரை மீட்கும் வீரனை “இந்திரன்” என்று குறிப்பிடுகிறது. இந்திரனை அழைத்து, நிரை மீட்டல் காவிட்டிக்கு உதவ யாகம் மேற்கொள்ளப்படுகிறது. மீட்டலுக்கு முன்பாக நிகழும் இந்நிகழ்சிகளைக் காணும்பொழுது, நிரை மீட்டலில் வீரனின் தன்னெழுச்சியைவிட முழுவின் ஒருங்கிணைந்த செயல் இங்கு வெளிப்படுகிறது.

     இருடி ஹிரண்யஸ்தூபன், இந்திரனைப் போற்றும்பொழுது -  

“வாருங்கள்! நாம் திருடப்பட்ட பசுக்களை மீட்க நம்முடைய இந்திரனிடம் செல்வோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரறிவை ஊக்கப்படுத்துகிறான். பிறகு, அவன் நமக்கு பசுக்களின் இச்செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அறிவிப்பான்”.

இது, பிறரால் ஆநிரைகள் கவரப்படும்பொழுது அது இகழப்படுவதை (திருடப்பட்டது என்று கூறுவது) காணமுடிகிறது. இது சென்ற அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட ரிக் சமூகத்தினரின் கவர்தல் போர்களின் சித்தரிப்புகளோடு ஒப்பிட்டு, ஒரே செயல் வீரமாகப் போற்றப்படுவதும், இகழப்படுவதுமான இரு சித்தனைகளை ஒரே சமூகம் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

தமிழ் இலக்கியத்தில், ஆநிரை கவர்தலில் இழந்த செல்வம் குறித்த அல்லது அச்செயல் குறித்து இழந்த சமூகத்தின் மனநிலை என்ன என்பதற்குச் சான்றுகளில்லை. சங்க இலக்கியம், வீரயுகக் கவிதைகள் என்பதற்குச் சான்றாக இம்மனநிலைப் பதிவுகள் இல்லாமையினையும் எடுத்துக்கொள்ளலாம். கவர்தல் ஒரு வீரச்செயல் என்றால், மீட்டல் அதனிலும் வீரச்செயல் என்பதே வீரயுகத்தின் கோட்பாடாக இருக்கலாம். போர்ச் செய்திகளை அதிக அளவில் கொண்டிருப்பினும் ரிக் என்றுமே வீரயுகத்தின் படைப்புகளாகக் கொள்ளப்படுவதில்லை என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. இதன் காரணமாகவே, எதிரியின் வீரம் பழிக்கப்படுதல் ரிக்கில் பல இடங்களில் வெளிப்படுகிறது.

இருடி காதினன் – விஸ்வாமித்திரனின் பாடல் ஒன்று (ரிக், மண்டலம் 3: பாடல் 47, ம.ரா. ஜம்புநாதன் (மொ.பெ), தொகுதி-1, ப. 735, அலைகள் வெளியீடு, சென்னை), பசு மீட்ட செய்தியைத் தருகிறது. பசுவை மீட்டவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான். இந்த பசு மீட்டலில் ஈடுபட்டு இந்திரன் பட்டத்தை பெற்றவனாக சங்கிராமத்தின் தலைவன் உள்ளான். இவனது இயற்பெயரை அறியமுடியவில்லை. மீட்டல் போருக்கு முந்தைய ஆயத்த நிகழ்வுகள், அப்போரில் ஏற்பட வேண்டிய தங்கள் விருப்பம், வெற்றியை ஈட்டித்தந்த வீரனின் புகழ் ஆகியவை இதில் துதியாக்கப்பட்டுள்ளது.

  1. “இந்திரனே! விருஷபனே! மருத்துகளோடு இருப்பவனே! போருக்காக நீ மதப்பட, மற்ற அவிகளுக்குப் பிறகு அளிக்கப்படும் சோமத்தைப் பருகவும், களிப்புருத்தும் சோம தரங்கத்தை உன் உதரத்தினுள் ஊற்றிக்கொள்ளவும், நீ பூர்வத்திலிருந்தே சோமத்தின் தலைவனாய் இருக்கிறாய்”.
  2. “இந்திரனே! சூரனே! மருத்துகளின் படையால் பின்பற்றப்படுபவனும், அதனுடன் இன்புருபவனுமான நீ, சோமத்தைப் பருகவும், ஏனெனில் நீ விருத்திரர்களைக் கொல்பவன்; நீ அறிஞன்; பகைவர்களை அழிக்கவும்; எதிர்ப்பவர்களை விலக்கவும்; பிறகு எங்களை எங்கும் அபயப்படுத்தவும்”.
  3. “ருதுக்களோடு சேர்ந்து சோமத்தைப் பருகும் நீ, தேவர்களுக்கும் நண்பர்களான மருத்துகளோடு சேர்ந்து எங்களால் அளிக்கப்படும் சோமத்தைப் பருகவும். ஏனெனில் போரிலே அந்த மருத்துகள் உனக்குப் பாலனம் அளித்து உன்னை இன்புறுத்தினார்கள், உன்னைப் பின்பற்றிப் பலப்படுத்தினார்கள் அதனால் நீ விருத்திரனைக் கொன்றாய்”.
  4. “செல்வனே! அஹியைக் கொல்ல உன்னை ஊக்கப்படுத்தியவர்களும், சம்பரனோடு போர் புரிய உனக்கு உதவி செய்தவர்களும், பசுக்களை மீட்கத் துணை செய்தவர்களும், விப்பிரர்களும் உன்னை மதப்படுத்தியவர்களுமான மருத்துகளின் படையோடு – சேர்ந்து - இந்திரனே நீ சோமத்தைப் பருகவும்”.
  5. “நாங்கள் எங்கள் புதிய பாலனத்துக்காக இந்தப் போரிலே புகழுள்ளவனும், செல்வம் அளிக்கும் சங்கிராமத்தின் தலைவனும், துதிகளைச் செவியுறுபவனும், போர்களில் பயங்கரனும், பகைவர்களை அழிப்பவனும், பொருள்களை வெல்பவனும், செல்வனுமான இந்திரனை அழைக்கிறோம்”.

பாடலில் இரண்டு இந்திரர்கள் சித்தரிக்கப்பட்டுவதைக் காணலாம். ஒரு இந்திரன் பெரும் வீரனான இந்திரலோகத்து இந்திரன், மற்றொருவன், தங்களுள் ஒருவனாக வாழும் வீரன் இந்திரன். இந்திரலோகத்து இந்திரனின் எல்லாப் புகழும் பெறத்தக்கவனாக தங்களுடன் வாழும் இந்திரனும் போற்றப்படுகிறான்.

ரிக்கின் தனிப்பெரும் கடவுளான இந்திரன் யார் என்பதை அடைய இருடி காதினன் – விஸ்வாமித்திரனின் இவ்வரிகள் திறவுகோலாக அமைகிறது. சமூக நன்மை கருதிய போரில் செயற்கரிய செயலைப் புரிந்தவனே, புரிந்து மாய்ந்து இந்திரலோகம் அடைந்த முன்னோன் ஒருவனே இந்திரன் என்பதை இது தெளிவாக்குகிறது. வணக்கத்துக்குக் குல மூதாதையனும் இவனே.

தமிழ் மரபின் வேடியப்பன் வணக்கத்தில் இருந்து இந்திரன் வணக்கம் வேறுபட்டதல்ல என்பதை அடையாளப்படுத்திக்கொண்டால், மேய்த்தல் சமூகங்களிடையே வீரன் வணக்கம் ஒரு பொதுத்தன்மையுடன் விளங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வேடியப்பன் நடுகல்லாகி என்றும் வாழ்பவனாகிறான். இந்திரன் பாடல்களில் உயிர்த்திருக்கிறான் என்பது மட்டுமே அடையகூடிய வேறுபாடாக இருக்கிறது. இந்திரன் போலவே, அக்னி, வருணன், சோமன் முதலானவர்கள் மூதாதைகளாகவும், இறைநிலை அடைந்தவர்களாகவும்; அதேசமயத்தில் அவர் குணம் பெற்ற வாழும் மனிதர்களும் மூதாதையரின் பெயரில் குறிக்கப்படுவதையும் காணலாம். இதே கருத்தை வழங்குவதாக இருடி வாமதேவன் – கெளதமன் ரிபுக்களை நோக்கிக்கூறுவதும் உள்ளது.

“உங்களிடம் செல்வங்கள் இருக்கின்றன. உங்களிடம் பிரகாசிக்கும் தேரும், பருமனாயுள்ள குதிரைகளும் இருக்கின்றன. இந்திரனின் புதல்வர்களே! பலத்தின் பேரர்களே! இந்தக்கடை யக்ஞம் உங்கள் மதத்துக்காகத் தோன்றுகிறது” (ரிக்-4: 37:4).

யுத்தங்களின்பொழுது பசுக்கள் மீட்கப்பட்ட செய்தி இருடி ஹிரண்யஸ்தூபன் வரிகளில் கிடைக்கிறது. இது விருத்திரனுடன் நடந்த போர். எனில், விருத்திரன் இப்போருக்கு முன் பசுக்களைக் கவர்ந்தான் என்பதை அறியமுடிகிறது.

“தாச பத்தினியான சலங்கள் அஹியால் பாலிக்கப்பட்டு, பணியால் பசுக்களைப்போல் தடைபட்டிருந்தன. இந்திரன் விருதிரனைக் கொன்று தடை செய்த குகையைத் திறந்தான்”: இந்திரனே! தேவனும், ஏகனுமான விருத்திரன் உன்னாயுதத்தால் தாக்கப்பட்ட அடிக்கு எதிரடி செய்யுங்கால், நீ குதிரையின் வால்போல் உக்கிரமானாய் நீ பசுக்களை மீட்டினாய். சூரனே! நீ சோமரசத்தை வென்றாய். நீ ஏழு நதிகளைப் பாயவிடுவித்தாய். ( ரிக்-1, 32: 11-12).

வரவிருக்கும் அத்தியாயங்களில், பகைவருடன் போர்கள் பகுதியில் அன்று மேற்கொள்ளப்பட்ட யுத்த நடைமுறைகள் பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். மேற்குறித்த பாடலில், விருத்திரன் ரிக் சமூக மக்களின் பகைவன். ரிக் சமூகத்தினர் மேய்த்தல் தொழில் புரிய, விருத்திரன் வேளாண்மைத் தொழில் புரித்தவனாக இருக்கிறன். இவன் வேளாண்மையை விரிவாக்க அணைகளை அமைத்து நீர்ப்பாசன வசதிகளை அமைத்ததில் சிறந்து விளங்கியுள்ளான். மேய்த்தல் சமூகத்தினருக்கு நீர் மேலாண்மையோ அது சார்ந்த தொழில்நுட்பமோ அவசியமற்ற ஒன்று. அதனால், விருத்திரனின் நீர் மேலாண்மை அறிவு இங்கு இகழப்படுகிறது. அதனால், யுத்தத்தின் ஒரு பகுதியாக அணைகளை உடைத்து அழிவு செய்ததை, நதிகளைப் பாயவிடுவித்தாய் என புகழப்படுகிறது.

தற்கால யுத்தங்களில் அணைகளை உடைப்பது என்பது எதிரியை எதிரியின் கட்டுமானத்தைக் கொண்டே நிலை தடுமாறச்செய்யும் யுக்திகளில் அல்லது யுத்த தந்திரங்களில் ஒன்று. ஆனால், ரிக் சமூகத்தினர் இதனை யுத்த தந்திரமாகப் புரியவில்லை. வேளாண்மை தொழிலில் நீர் மேலாண்மை நுட்பத்தை புரிந்துகொள்ளமுடியாத நிலையில் தேங்கி நிற்பது நதியின் குணமன்றே என்ற புரிதலில், அதனை மேய்த்தல் தொழில் புரிந்தவர்கள் விடுத்த செயலாகும். இப்போரின் நோக்கம் பசுக்களை மீட்பதே. இதன் உண்மையை, இருடி கிருத்சமதன் கூற்றில் இருந்தும் அறியலாம்.

‘‘மானிடர்களே!’’ அஹியைக் கொன்று ஏழு நதிகளை விடுவித்தவனும், பலனால் தடுக்கப்பட்ட பசுக்களை மீட்டவனும், மேகங்களின் நடுவே அக்கினியை தோற்றுவிப்பவனும், போர்களிலே பகைவர்களை வெல்பவனுமான இந்திரன்” (ரிக்-2: 12:3).

ரிக் சமூகத்தினரின் நிரைகளைக் கவர்ந்தவர் யார்? இந்த நிரை கவர்தலே ரிக் சமூகம் விவரிக்கும் பெரும் போர்களுக்குக் காரணமா? என்ற கேள்வி பகைவருடன் ரிக் சமூகம் புரிந்த யுத்தங்கள் யாருடன் எதற்காக என்பற்கான பதிலைத் தரக்கூடும். ரிக் அறியத்தரும் பகைவருடனான போர்கள் என்பவை சிந்துவெளி மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்களா என்ற கேள்வி உடனே எழுவதை தவிர்க்க முடியவில்லை. ரிக் சமூகம் தம் பகைவராக தஸ்யு, தாசன், பணி போன்ற சில குறிப்பிட்ட பெயர்களைத் தருகிறது. தமிழகத்தில் அரசு உருவாக்கத்துக்குப் பிறகு, ஆநிரை கவர்தல் என்பது அரசன் போருக்கு விடுக்கும் முன் அழைப்பு என்ற செயலோடு ரிக் சுட்டும் ஆநிரைப் போர்களைக் காணமுடியுமா?

ரிக் சமூகத்தினரின் நிரைகளைக் கவர்ந்த இவர்கள் யார் என்ற தேடுதலுடன் இவர்கள் ஏன் ரிக் சமூகத்தினருக்குப் பகைவரானார்கள், இவர்களிடையே நிகழ்ந்த யுத்தங்களின் முடிவு என்ன? இம்முடிவு இந்திய பண்பாட்டில், சமுகப் பொருளாதார அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பது வரும் அத்தியாயங்களில்..

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com