பாகிஸ்தானில் முதன்முதலாக சிந்துவெளி எழுத்துகள் - பாறைக்கீறல் உருவங்களாகக் கண்டுபிடிப்பு!

சிந்துப் பகுதியை அடுத்து தகடூர்ப் பகுதியான தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரிப் பகுதிகளில்தான் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த அல்லது அதன் மாற்று வடிவங்களில் உள்ள எழுத்துகள் ஏராளமாகக் கிடைத
பாகிஸ்தானில் முதன்முதலாக சிந்துவெளி எழுத்துகள் - பாறைக்கீறல் உருவங்களாகக் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பழமையான நாகரிகங்களின் ஒன்று சிந்துவெளி நாகரிகம். அண்மைகாலக் கண்டுபிடிப்புகள், சிந்துவெளி நாகரிகத்தை எலமைட், மெசபடோமியா, எகிப்து நாகரிகங்களைவிட பழமையானது என்று காட்டுகின்றன. மேலும், இது வேறு எந்த நாகரிகத்தையும்விட மிகப்பெரிய பரப்பில் பரவியிருந்ததும்கூட. இது, மொகஞ்சதாரோ நாகரிகம் என்றும் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. ஒப்பற்ற நகர நாகரிகமாகத் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகம், அதன் உயர்தரமான வலிமையான நேர்த்தியான கட்டட வடிவமைப்புகளுக்காகவும், கழிவுநீர்க் கால்வாய் வசதி, திட்டமிட்டு அமைக்கப்பட்ட தெருக்கள் போன்றவற்றுக்காகவும் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை ‘‘சிந்துவெளி எழுத்துகள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வெழுத்துகளின் பொருளை அறிவது என்பது, தொல் எழுத்தியலாளர்களுக்கு இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

முத்திரைகளில் மட்டுமே கிடைந்துவந்த சிந்துவெளி எழுத்துகள், தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள கிர்தார் மலைப் பகுதியில் பாறைக்கீறலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் அசீஸ் கிங்ரானி என்பவர் இதைக் கண்டுபிடித்துள்ளார். முத்திரை வடிவங்கள் தவிர்த்து பாறையில் கீறல் உருவங்களாக அல்லது கீறல் ஓவியங்களாக சிந்துவெளி எழுத்துகள் கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும், சிந்துப் பகுதியிலேயே கிடைத்திருப்பது மிகுந்த முக்கியம் வாய்ந்ததாகிறது. கிர்தார் மலை, மொகஞ்சதாரோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாஹி பாண்டி என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

இங்கு, சிந்துவெளி எழுத்துகளை ஒத்த அல்லது அதன் மாற்றுருவங்கள் சார்ந்ததாக 60 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அசீஸ் கிங்ரானி அவர்களின் செய்தியை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை (09.09.2019) வெளியிட்டுள்ளது.

பொதுவாக, மொழியின் எழுத்துகள் என்பவை பட எழுத்து நிலையில் இருந்து வளர்ந்து, படிப்படியாக கருத்தெழுத்தாக, ஒலி எழுத்தாக, சொல் எழுத்தாக வளர்ச்சி என மொழியின் நெடுங்கணக்கு அமைகிறது.

சிந்துவெளி எழுத்துகள் பட எழுத்துகளா, கருத்தெழுத்துகளா, ஒலி எழுத்துகளா அல்லது சொல் எழுத்துகளா என்று வகைப்படுத்துவதில் அறிஞர்களிடையே கருந்து முரண்கள் உண்டு. இக்கருத்து முரணும் ஒருவகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் படிப்பை வழங்காதிருக்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அடிப்படையில் ஓவியமும், எழுத்துமுறையும் ஒரு சமூகத்தின் ஆகச்சிறந்த பண்பாட்டின் அடையாளங்கள். என்றாலும், தொன்மையான பாறைக்கலையான பாறை ஓவியங்கள், கீறல் ஓவியங்களின் நோக்கத்துக்கும், எழுத்துமுறைக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. பாறைக்கீறல்கள் அல்லது ஓவியங்கள் பெரும்பான்மையாக வழிபாடு அல்லது மந்திரம் அல்லது சடங்கியல் சார்ந்தவைகளாக உள்ளன.

இந்தவகையில், தற்பொழுது பாறைக்கீறலாக கிடைத்துள்ள உருவங்களை சடங்கியல் சார்ந்து வழிபாடு, மந்திரம் ஆகிய அறிவுகளோடு பொருத்திப்பார்க்க பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், சிந்துவெளி எழுத்துகள் மற்றும் அம்மக்களின் பண்பாட்டுப் போக்குகள் குறித்தும், வளர்ச்சி நிலைகள் குறித்தும் அறிய பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளதாகக் கருதலாம்.

சிந்துப் பகுதியை அடுத்து தகடூர்ப் பகுதியான தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரிப் பகுதிகளில்தான் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த அல்லது அதன் மாற்று வடிவங்களில் உள்ள எழுத்துகள் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன. சிந்துவெளி எழுத்துகளுக்கு அடுத்து எழுத்ததாக உள்ள எழுத்து வடிவமான கீறல் குறியீடுகளும் சிந்துவெளி எழுத்துகளுடன் இணைந்து கிடைப்பதும் தகடூர்ப் பகுதியின் சிறப்பு.

பாகிஸ்தானில் கிடைத்துள்ள கீறல் உருவங்களின் காலம், அப்பகுதியின் செம்புக் காலத்திலிருந்து இரும்புக் காலத்தின் துவக்கம் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஏறத்தாழ முன் பொது ஆண்டு 3000 முதல் 1000 வரையிலான காலகட்டமாகும். அதாவது, இன்றைக்கு 5000 முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானதாகும். தகடூர்ப் பகுதியில் கிடைப்பவை இன்றைக்கு 2500 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளன. எனில், வாஹி பாண்டியில் கிடைத்துள்ள கீறல் உருவங்கள் கொண்டு சிந்துவெளிப் பாண்பாட்டு மரபின், சடங்கு ரீதியான தொடர்ச்சியை அறிவதற்கு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதலாம். அவை, முத்திரை எழுத்துகளில் செலுத்தியுள்ள தாக்கத்தை அறிவதற்கும் உதவும். எனில், இது அடுத்தகட்ட நகர்வுக்கு வழியமைத்துத் தரும் கண்டுபிடிப்பாகும். சிந்துவெளி எழுத்து ஆய்வாளர்களுக்கும், பண்பாட்டு ஆய்வாளர்களுக்கும், பாறைக்கலை ஆய்வாளர்களுக்கும் பெரிய சவால் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

Pic courtesy: www.dawn.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com