காத்தாடிக்குப்பம் தீப்பாய்ந்தான் கல்: ராஜேந்திர சோழ சோமீர பிச்சி பொக்கன் நினைவுக்கல்

வழக்குக்கு மாறாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காத்தாடிக்குப்பத்தில் உள்ள நடுகல் கல்வெட்டு ஒன்று ஆண் தீப்பாய்ந்ததை விவரிக்கிறது.
தீப்பாய்ந்தான் கல் - காத்தாடிக்குப்பம்
தீப்பாய்ந்தான் கல் - காத்தாடிக்குப்பம்

தீப்பாய்தல் செயல் சதியோடு தொடர்புடையது. பெண்ணினத்தின் சாபக்கோடான சதி பெண்ணினப் பெருமையாக காலந்தோறும் அடையாளப்படுத்தப்படுவது. இதன் துவக்க காலக்கட்டம் எவ்வளவு தொன்மையானது எது என்பது அறிந்திராதது. சதி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே உலகம் முழுவதும் எல்லா சமூகங்களிலும் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு. ஆனால், தனிச்சொத்து, குடும்பம், ஆண்வழிச் சமூகம், ஆணாதிக்க சிந்தனை, பெண்ணே பெண்ணைக் கைவிடும் சிந்தனைகள் கட்டமைக்கப்பட்ட காலகட்டத்தில் இது வலிமைபெற்றது எனக் குறிப்பிடலாம். இதன் வேர், மாந்தரினத்தின் சமூக வரலாற்றில் 19-ம் நூற்றாண்டு வரை வேரூன்றியுள்ளது. இந்தியாவில் 20-ம் நூற்றாண்டிலும் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டபோதிலும் ஆங்காங்கே மறைமுகமாகவும், வெளிப்படையாக சட்டத்துக்கு எதிராகவும் இச்செயல் நடப்பது குறித்த செய்திகள் உண்டு.

காரணங்கள் பலப்பலவாக சொல்லப்பட்டாலும், ஏடறியா காலகட்டத்திலும் சரி, அறிந்த காலகட்டத்திலும் சரி, கணவன் சிதையோடு பெண் தானும் எரிவது இதன் பொது வரையறை.

தீயுள் தம்மைக் பொசுக்கிக்கொள்வது தெய்வநிலை; தீயுள் புகுந்து உயிர்த்தெழுந்து நிற்பது புனிதம்; களங்கமின்மையைப் பறைசாற்றும் பெருநிலை; ஒப்பற்ற காதலின் அரிய வெளிப்பாடு, சமூகத்தில் உயர்மதிப்பு வாய்ந்த இடம் என்ற கருத்துருவங்கள் இச்செயலைத் தூண்டுகிறது. இந்தப் புறக்காரணத்தைவிட சமூகத்தில் அல்லது குடும்பத்தில் வாழ்வியல் சார்ந்த இடர்கள், நடைமுறை நெருக்கடிகள், நெருக்கடிகளால் உளவியல் பாதிப்பு அகக்காரணமாக, முக்கியக் காரணமாகப் பங்காற்றுவது பொதுவாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எவ்வாராயினும், தீயிலிருந்து உயிர்த்தெழுவது புராண தேவியருக்கு மட்டும் வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பு முதல்வகையினரான உயிரும் சதையுமான வாழும் தேவியருக்குக் கிட்டியதில்லை. வாழும் தேவியர்; வாழ்ந்த தேவியராகின்றனர்; தீப்பாஞ்சி அம்மன், பூவாடக்காரி, பூவாடைக்காரி அம்மன் என்ற சிறப்புப் பெயர்களோடு. அம்மன் சொல்லாட்சி, சதி மகளிர் தெய்வநிலைக்குப் போந்தனர் என்பதன் எளிமையான உருவகம்; அதேசமயத்தில், சமூகத்தினரின் மனதை ஈர்க்கும், அவர்களிடையே உயர் மதிப்பை அளிக்கும் வலிமையான பேரடையாளம்.*1 சதிப்பெண்டிருக்கு எடுக்கும் கல் சதிக்கல், மாசாத்திக் கல், தீப்பாஞ்சாள் கல் என்று பல பெயர்களால் குறிப்பிப்படுகிறது.

தீப்பாய்ந்தான் கல்

வழக்குக்கு மாறாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காத்தாடிக்குப்பத்தில் உள்ள நடுகல் கல்வெட்டு ஒன்று ஆண் தீப்பாய்ந்ததை விவரிக்கிறது. அவப்பேறாக இன்ன காரணத்துக்காக தீப்பாய்ந்தான் என்பதை கல்வெட்டு துலக்கமாக்கவில்லை; கல்வெட்டின் சிதைந்த சொற்களுடனான மூன்றுவரி பின்பகுதி அதனைத் தமக்குரியதாகக் கொண்டுவிட்டது எனக் கருத இடம் உள்ளது.

பொ.ஆ.1048-ல், முதலாம் ராஜாதிராஜனின் 30-வது ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ‘‘நிகரிலிச் சோழமண்டலத்து, எயில்நாட்டு, மேலையூரைச் சேர்ந்த கங்கன் வசவனான ராஜேஞ்ர (ராஜேந்திர) சோழ சோமீர பிச்சி பொக்கன் என்பவன் தீப்பாய்ந்தான்’’*2 என்பது கிடைக்கப்பெற்ற கல்வெட்டுப் பகுதி அறியத்தரும் செய்தி.

சோமீரப் பிச்சி பொக்கன் சோழப் பேரரசுக்கு நம்பிக்கையும் உண்மைக்குக் உடையவன் என்பதைக் காட்டும் விதமாக, சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் பெயரை தன் பெயருக்கு முன்னால் ஒரு அடையாக இணைத்துக்கொண்டிருக்கிறான். இடைக்காலத் தமிழக வரலாற்றில், பேரசரர்களின் பெயரைத் தம்பெயருக்கு அடையாக இணைத்துக்கொள்வது மரபாக இருந்துள்ளது. குறுநில மன்னர்கள், பிரதானிகளான அரசியல் தலைவர்கள், ஊர் முதலிகள், உள்ளூர்த் தலைவர்கள், படைத் தலைவர்கள், மந்திரிகள், வீரர்கள், மெய்க்காப்பாளர்கள் போன்றோர் இதனைக் கைக்கொண்டு தம்மை பேரரசர்களுக்கு நெருக்கமாக உள்ளதைக் காட்டும் அடையாளமாக இருத்திக்கொண்டனர். சோமீரப் பிச்சி பொக்கனின் பெயர் காட்டுவது இம்மரபின் வழிப்பட்டது. இப்பெயர் அடையாளம் அவன் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசோடு தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவன் என்பதை காட்டுகிறது. அவன் எயில் நாட்டு மேலையூரைச் சேர்ந்த கங்கன் வசவன் என்று குறிப்பிடப்படுவதால், மேலையூரினை ஆட்சிபுரிந்த கங்க மரபினைச் சார்ந்தவன் என அறியலாம். (வசவன் = இடத்தவன், சேர்ந்தவன், பிறந்தவன் என்ற பொருளுடைய சொல், இங்கு கங்கர் குடியினைச் சேர்ந்தவன் அல்லது பிறந்தவன் என்று பொருள் கொள்ளலாம்). எயில் நாடு என்பது இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐங்குன்றம், ஜகதேவி, மகராஜகடை, கங்கவரம், காத்தாடிக்குப்பம், பெண்ணேசுவரமடம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பண்டைய நாட்டுப் பிரிவு. நடுகல்லில் காட்டப்படும் குதிரை மீதமர்ந்து கொடியைத் தாங்கிவரும் இருவர் உருவங்கள் இவனது அரச தகுதியைக் காட்டுகிற மற்றொரு சான்றாகிறது.

தகடூர்ப் பகுதி மற்றும் கர்நாடகத்தின் கோலார் மாவட்டக் கல்வெட்டுகள், கங்கர் மரபில் வந்த கிளைக்குடியினர் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இவர்கள் தலைக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மேலைக் கங்கர்களில் இருந்து வேறானவர்கள். இக்கிளைக்குடியினர் கோலார் உள்ளிட்ட தகடூர்ப் பகுதியில் சிறுசிறு பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளனர். அக்கிளைக்குடி வழியில் வந்தவனுள் ஒருவனாக இந்த சோமீர பிச்சி பொக்கன் இருக்க வேண்டும். 12 முதல் 14-ம் நூற்றாண்டுகளில் அத்தியாழ்வார், தர்மத்தாழ்வார், அழகிய பெருமாள் அத்திமல்லன், பூர்வாதராயா பூமிநாயக்கன் போன்ற கங்கர் கிளை மரபினரில் கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் எயில் நாட்டுப் பகுதிலேயே கிடைக்கின்றன. கங்கன் வசவன் சோமீரப் பிச்சி பொக்கன் இவர்களுக்கு முன்னோனாக இருக்க வேண்டும்.

கல்வெட்டு தெளிவற்று இருப்பதால், சோமீர பிச்சி பொக்கன் எதற்காகத் தீப்பாய்ந்தான் என அறியமுடியவில்லை. காரணங்களை அறிவதற்கு அன்றைய சமூகத்தின் போக்குகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டு ஆலோசிக்க வேண்டியதாக உள்ளது.

தற்பலி என்ற உயிர்க்காணிக்கை

‘தற்பலி’ அல்லது ‘உயிர்க்காணிக்கை’ செயல் சொந்த காரணங்களால் ஒருவரால் மேற்கொள்ளப்படுவதாகும். ‘‘உயிர்க்கொடை’’ என்றும் இது குறிக்கப்படுவதுண்டு. தற்பலிக்கான காரணங்கள் பலவாக இருந்துள்ளன. இக்காரணங்களை இருவகையாகத் தொகுத்துக் காணலாம். இறைவனுக்கு இறைவிக்கு தன் வேண்டுதல் நிறைவேறியபின் அல்லது நிறைவேற தற்பலி செய்து உயிரை வழங்கல் ஒரு வகை. சக்தி, காளி, கொற்றவை போன்ற தாய்தெய்வங்களுடன் தொடர்புடையதாக இச்செயல் காணப்பட்டு, சாக்த வழிபாட்டின் ஒரு போக்காக காண்பதுண்டு. தற்பலிச் செயல் தன் தலைவனின் அல்லது மன்னனின் போர் வெற்றி, மன்னனின் நலம், தன் குடும்ப நலம், நோயில் இருந்து விடுதலை, பகை தீரல் போன்ற பல காரணங்கள் அடங்கியுள்ளன. இவ்வகையில் மேற்கொள்ளப்படும் செயல் இறைவன் இறைவியின் முன்னின்று அல்லது பொருட்டு நடக்கும்; இரண்டாம் வகை தலைவன் இறந்தால் அவனது மெய்காப்பாளர்கள் அல்லது விசுவாசமான வேலையாட்கள் அவனுடன் தானும் மாய்வோம் என்று உறுதி செய்துகொண்டு தற்பலி செய்துகொள்வதாகும்.

தற்பலியாக உயிரை காணிக்கையாக்கல் சிற்சில வேறுபாடுகளுடன் பலவகையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றை நவகண்டம் மற்றும் அரிகண்டம் என்று இரு பெரும் வகையாகக் காணலாம். நவகண்டம், தம் உடலை ஒன்பது துண்டங்களாக அறுத்து காணிக்கையாக்கல் என்னும் செயலாகும். அரிகண்டம் என்பது, கழுத்தைத் துண்டித்து தலையைக் காணிக்கையாக்கல் என்னும் செயலாகும். இதன் வடிவங்களாக தலைப்பலி, தூங்குதலை அல்லது தூக்குதலைக் கற்களைக் குறிப்பிடலாம். கர்நாடகப் பகுதில் காணப்படும் ‘சிடிதலக்கல்’லும் தூக்குதலைக் கல்லை ஒட்டியதே. அரிகண்டமும் தலைப்பலியும் சற்றேறக்குறைய ஒரு செயலை சுட்டுவதாகத் தோன்றினாலும் அரிகண்டம் கழுத்தை அறுத்து உடலைப் படைப்பது என்ற பொருள் தரும் செயலாகும். தலைப்பலி என்பது தலையை படையல் பொருளாக்குவது என்ற பொருள் தரும் செயலாகும். இதில் தூக்குதலை என்பது தன் தலையை மூங்கில், மரக்கிளையை வளைத்து தலையுடன் அல்லது தலைமுடியுடன் பிணைத்து தலையை வெட்டிக்கொள்வதாகும். இதனால் துண்டிக்கப்பட்ட தலை நிமிர்ந்த மூங்கிலில், மரக்கிளையில் ஊஞ்சலாடுவதுபோல் அலைந்தாடும். இவ்வாறு அலைந்தாடுவதால் கர்நாடகப் பகுதிகளில் இவ்வகைக் கற்கள் சிடிதலை கற்கள் (sidi-tala) என்று பெயரிடப்பட்டுள்ளன. இதில் தலையைத் துண்டிக்க மூங்கில் அல்லது மரக்கிளை அல்லது ஏற்றம் போன்ற அமைப்புடைய சாய்வாக அமைக்கப்படும் தூண்கள் ஆகியவையும் பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும், தற்பலி செயலானது, தானே செய்துகொள்வது அல்லது மற்றொருவர் உதவியுடன் செய்துகொள்வது என இருவகையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தமிழகப் பகுதியில் தலைப்பலி, தூக்குதலை, நவகண்டம் போன்று தற்பலி கற்கல் கிடைத்துவர, ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் இவற்றில் இருந்து வேறுபட்ட வகையில் மன்னன் பொருட்டும், பக்தியின் காரணமாகவும் தற்பலி செய்த வீரர்கள் பற்றியும் அவர்கள் புரிந்த தற்பலி முறைகள் குறித்த செய்திகளும் அவ்வாறு தம்மை மாய்த்துக்கொண்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கற்களும் கிடைத்து வருகின்றன.

‘‘கீழ்குண்டே கல்’’, ‘‘வேலவழிக்கல்’’, ‘‘ஜொலவழி கல்’’, ‘‘துலியல் கல்’’ என வகைப்படுத்தப்படும் நடுகற்களை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம். பின்மூன்றும் ஒருவகைப்பட்டவை; ஆனால் தரப்பாகுபடு கொண்டவை. இவையன்றி கூர்முனைப் பாய்ந்தும், சடங்குக்காக எடுக்கப்பட்ட தீயில் ஊஞ்சலாடுவதுபோல் ஆடி உயிரைக்கொடை தரும் ‘தான் உரி உய்யாலா’ போன்ற தற்பலிச் செயல்களையும் காணமுடிகிறது. இவற்றுள், கீழ்குண்டே வகை சிதைத்தீயில் அமர்ந்திருப்பது, பிணக்குழியில் உயிருடன் புதைவது என்ற உள்வகைகள் உண்டு.

கீழ்குண்டே கல் (ஆந்திரா, கர்நாடகப் பகுதி - Kilgunde memorials)

கீழ்குண்டே என்ற சொல் பலவகைப்பொருள் கொண்டது. கீழ்குண்டே வழியில் தன் உயிரை தலைவனுக்காக தருபவர் புதைகுழி அல்லது எரிகுழிக்குள் உயிருடன் அமர்ந்துகொண்டு, தன் மடிமேல் தலைவனின் உடலை படுக்கவைத்துக்கொள்வார். அல்லது நீட்டிப்படுத்துக்கொண்டு தம்முடல் மீது தலைவனின் உடலை படுக்கவைத்துக்கொள்வார். இதன்மூலம் தலைவனின் உடல் தரையில் படாது இருக்கும். இறந்தவர் உடலுக்கு இடப்படும் தீயில் தானும் கருகி மாய்வார். அல்லது புதைகுழியில் மூச்சுத்திணறி இறப்பர். நந்திகுடி நடுகல் கல்வெட்டொன்று கீழ்குண்டே செயலைக் காட்டுகிறது. ‘‘பொ.ஆ.930-ல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, கீழ்குண்டே செய்துகொண்ட பணியாளன் பெயர் ஆல்லிகே என்று தெரிவிக்கிறது. அவனுடை தலைவனான கங்க மன்னனின் பெயர்ப்பகுதி அறியமுடியாதபடி சிதைந்துள்ளது’’. தொட்டாஹண்டி நினைவுக்கல்லும் ‘நிட்டிமார்கா’ என்பான் கீழ்குண்டேவுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டதைக் காட்டுகிறது.*3 நந்திக்குடி ஆல்லிகே குடும்பத்தினருக்கு கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறான கொடையை தமிழகப் பகுதியில் போர் / பூசலில் வீரமரணம் அடைந்த வீரனின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ‘‘உதிரப்பட்டி’’ கொடையோடு இணைத்துக்காண இயலாது. கீழ்க்குண்டே போன்ற செயலில் இருப்பது முழுமையான வீரத்தின் வெளிப்பாடு என்பதைவிட ‘‘விசுவாசத்தின் வெளிப்பாடு’’தான் முன்நிற்கிறது.

வேலவழிக் கல் ஜொலவழிக் கல், மற்றும் துலியல் கல் (Velavalis and Jolavalis, Tulial)

தலைவன் இறந்த பிறகு அவனைப் பின்தொடர்ந்து மரணத்தைத் தழுவோர் நினைவுக்கு எடுக்கப்படும் நடுகற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. கர்நாடக, ஆந்திரப் பகுதியில் காணப்படும் இவ்வகைக் கற்களில், இச்செயலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டவர்கள் வேளவடிகா, மானேமகன், மானேமுத்தா, பிரியபுத்திரா, பிராமாலயசுதன், போரிட-மகன் (?) (velavadica, manemagan, manemudda, priyaputra, premalayasutan and poreda-magan (?)) என குறிக்கப்படுவதை அறியமுடிகிறது.*4

உடலையும், மனதையும் தலைவனுக்கு முழுமையாக ஒப்படைப்பது வேலவழியாக இருப்பதை கல்வெட்டு சித்தரிப்பது கொண்டு அறியமுடிகிறது. வேலவழி உயர்வானதாகவும், ஜொலவழி தாழ்வானதாகவும் கருதப்பட்டுள்ளது. துலியல் என்பது வீரசித்தாந்தத்தைச் சார்ந்தது என்றும் அது வேலவழி மற்றும் ஜொலாவழியைவிட உயர்வானதாகவும் கருதப்பட்டது என இலக்கியச் சான்று கொண்டு காட்டப்படுவதுண்டு.*5 எவ்வாறாயினும், இவ்வகைகளில் தம்முயிரை ஈந்தவர்கள் பணியாளராகவே உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அல்லது உயர்பதவி உடையோர் யாரும் இதில் இடம்பெறவில்லை. இவ்வகைப்பட்ட செயலை சுட்டும் கற்கள் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்துக்குப் பிறகான கற்களை அறியமுடிவதில்லை.

தீயில் ஊஞ்சலாடியும் கூர்முனை பாய்ந்தும் தன் உயிரை அளிப்பது என்பது சடங்கு ரீதியில் மரணத்தைத் தழுவி மேட்சம் அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

கிடைக்கப்பெற்ற சான்றுகளை உற்று நோக்கினால், அரசனுக்காகவோ, தலைவனுக்காகவோ உயிரைக் காணிக்கை செய்யும் கீழ்குண்டே, வேலவழி ஜொலவழி, துலியல், அரசனுக்காகவோ சொந்த காரணங்களுக்காகவோ உயிரைக் காணிக்கையாக்கும் சிடிதலை உட்பட்ட தூக்குதலை, நவகண்டம், அரிகண்டம் முறைகள் அல்லது தீயில் ஊஞ்சலாடியும் கூர்முனைபாய்ந்தும் மேட்சம் தேடுவது என்பது இடைக்கால வரலாற்றில் பக்தியின் பெயராலும், விசுவாசத்தின் பெயராலும் மேற்கொள்ளபட்ட உயிர்க்காணிக்கைகளாகும்.

ஆந்திர – கர்நாடக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்திருப்பதால், மேலும் சோமீர பிச்சி பொக்கன் கன்னட-கங்கர் மரபில் வந்தவன் என்பதாலும் அப்பகுதியின் தாக்கத்துக்கு அவன் உள்ளாகியிருக்க வாய்ப்புகள் உண்டோ என்பதறிய, தற்பலியில் இம்முறைகள் ஆலோசிக்கப்பட்டன.

சோமீர பிச்சி பொக்கன் மேற்கண்ட காரணங்களுக்காக தீப்பாயவில்லை என்பதை சிற்பக்காட்சி அமைப்பில் இருந்து அறியலாம். கல்வெட்டும் மேற்கண்ட காரணங்களை கோடிட்டும் காட்டவில்லை. இவன் நிச்சயமாக தன் மனைவியின் பொருட்டு தீப்பாயவில்லை என்பது நூறு சதவீத உறுதி. ஏனெனில், அவன் மனைவி என கருதத்தக்க பெண்ணொருத்தி அவனது வலது பக்கம் வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளாள். அவள் சதியாகியிருக்கலாம். சதிக்குரிய எந்த முத்திரைகளையும் அவள் கொண்டிருக்கவில்லை. இருந்தும், கணவருடன் வணங்கிய நிலையில் காட்டப்படுவதும் சதியினைக் குறிக்கும் என எடுத்துக்கொள்வது உண்டு.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட ‘கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுக்கள்’ நூலின் குறிப்புரை, கல்வெட்டுச் சிற்பங்கள் குறித்துச் சில செய்திகளைத் தருகிறது. அது..

‘‘இந்த நடுகல்லில் இவ்வீரன் வழிபாட்டிலமர்ந்த நிலையில் காணப்படுகிறான். வலப்புறத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றும் அதன் அருகில் குடை பிடித்த ஒரு வீரனும் காணப்படுகின்றனர். இடப்புறம் மேலே விண்மகளிர், இறந்த வீரனை அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் அமைதியைக் காணும்பொழுது இவன் ஒரு தலைவனாகவோ, குறுநில மன்னனாகவோ இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.’’*6

இக்கல்லை மேலாய்வுக்கு உட்படுத்தியபொழுது, சிற்பச் சித்தரிப்புகள் வேறுபட்டிருப்பதும், கூடுதல் சிற்பங்களுடன் இருப்பதும் அறியமுடிகிறது.

இந்நடுகல் கல்வீட்டில் எழுப்பட்டது. நடுகல் கிழக்கு முகம் பார்த்தாக அமைக்கப்பட்டுள்ளது. இடதுபுற பலகைக்கல்லில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கல்வெட்டு எழுத்துகள் பெரிதும் சிதைவடைந்துள்ளன. சிற்பங்களும் தம்மின் நுட்பமான விவரங்களை இழந்து மங்கிவருகின்றன. மங்கிவருகின்றன என்பதைவிட சேதப்படுத்தப்பட்டுவருகின்றன என்பது தற்போதைய அவல நிலையை துல்லியமாகக் காட்டும்.

கல்லில் தலைவன் நடுநாயகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவன் அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்துள்ளான். இருகரங்களும் கூப்பிய நிலையில் வணங்கும் சிற்பஅமைதியாக அஞ்சலி முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. முகத்தின் உறுப்புகளை அறியமுடியாதபடி சேதமுற்றுள்ளது. கொண்டை ஒன்று சற்று சாய்வாக வலதுபுறத்தில் முடிக்கப்பட்டுள்ளது. அணிமணி, ஆபரண விவரங்களை அறிய முடியவில்லை. தலைவனின் இடதுபுறம் அவன் மனைவியானவள் வணங்கும் நிலையில் காட்டப்படுள்ளாள். தலைவனுக்கு வலதுபுறமாக அலங்கரிக்கப்பட்ட குதிரையொன்றின் மீது இருவர் அமர்ந்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொடியைத் தாங்கி பவனிவரும் காட்சியில் உள்ளனர். குதிரையின் குளம்புகளுக்குக் கீழும், தலைவனுக்குக் கீழும், பெண்ணுக்குக் கீழும் ஏழு எண்ணிக்கைக்குக் குறையாத சிற்றுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்கள் தெளிவற்று இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களாகவோ, வழிபாடு செய்யும் ஊராராகவோ, நண்பர்களாகவோ இருக்க வேண்டும். கல்வெட்டுக் குறிப்புரை குறிப்பிடும் விண்மகளிரைக் காணமுடியவில்லை.

குடை ஏந்தியவர்கள், அலங்கரிக்கப்பட்ட குதிரை ஆகியவை தீப்பாய்ந்தவன் உயர்நிலைத் தலைவனாகவோ, குறுநில மன்னனாகவோ இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. ‘கங்கன் வசவன்’ என்ற கல்வெட்டுத் தொடரும், அவனது ஆளும் குடிமதிப்பை உறுதிசெய்கிறது என்பது முன்னர் விளக்கப்பட்டது. ஆனால், இன்ன காரியத்துக்காக தீப்பாய்ந்தான் என்பதை சிற்ப அமைதில் இருந்தும் அறியமுடியவில்லை; காரணத்தைச் சொல்லும் கல்வெட்டுப் பகுதி சிதைந்துவிட்டது. இது தலைவன் வேண்டுதல் நிறைவேறியபின் நன்றியாக தீப்பாய்ந்தானா? அல்லது வேறு அரசியல் சமூகக் காரணிகள் அவனை இம்முடிவுக்கு வரவழைத்தனவா? என்ற குழப்பத்துக்குள் நம்மை ஆழ்த்திவிட்டது. காரணத்தை அறிய முடிந்திருக்கும் எனில், பத்தாம் நூற்றாண்டின் தமிழரது பண்பாட்டு வெளியின் மேலும் ஒரு பகுதி வெளிச்சமாகியிருக்கும். வெளிச்சம் நீங்கி இருளடைந்தது நம் அவப்பேறே.

எவ்வாறாயினும், ஆந்திர – கர்நாடகப் பகுதிகளின் கீழ்குண்டே, வேலவழிக்கல் ஜொலவழி கல், மற்றும் துலியல் கல், சிடிதலை, போன்ற காரணங்களுள் ஒன்றாக இதனைக் காண முடியாது என்பது நிச்சயம். ஏனெனில் இவன் தலைவன்; பணியாள் இல்லை. இவன் தன் சொந்த காரணங்களுக்காகத் தற்பலியாக தன் உயிரைக் காணிக்கையாக்கியிருக்கிறான். அவனை தொடர்ந்த அவன் மனைவி சதிக்கு தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

நடுகல்லின் தற்போதைய நிலை அல்லது பயன்பாடு

தொல்லியல் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை சீரழிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவனாக அல்லது வளர்த்தெடுத்த தலைமுறையைச் சேர்ந்தவனாக இருப்பதில் எனக்கு வருத்தம் மிகுதி உண்டு. எம் அடுத்த தலைமுறையினர் தொல்லியல் சின்னங்கள் மீது உச்சபட்ச உதாசீனத்துடன் இருப்பதை பல இடங்களிலும் கண்டிருக்கிறேன். கைவிடப்பட்ட சின்னங்களை முழுமையாகவோ பகுதியாகவோ கண்டெடுக்கையில் உருவாகும் ஆனந்தம் அக்கணம் மட்டுமே நீடிக்கிறது. அக்கணத்தில் உணர்ந்த லேசான மனத்தை பின்னர் அனுபவிக்க முடிவதில்லை. சந்தோஷத்தின் எல்லை அல்லது ஆயுள் அவ்வளவுதான் போலும். கைவிட்டவர்களைத் தூற்றத் தோன்றுவதில்லை. ஆனால், இக்கல்லின் தற்போதைய பயன்பாடு வேதனை அளிக்கிறது. நினைக்கும்தோறும் கனத்த இயத்தை உணர்கின்றேன்.

கல்வீட்டின் மூடுகல் அகற்றப்பட்டு, கல்வீடு விறக்கட்டைக் கட்டுகள் அடுக்கும் மேடையாகி உள்ளது. இதன் அருகில், மற்றொரு நடுகல் உள்ளது. அது ‘‘விஜயராஜேந்திரனாகிய முதலாம் இராசாதிராசன் காலத்தில் மேலையூரில் மூக்கனூருடையார் மருமகன் செட்டிக்கு எடுக்கப்பட்ட கல்’’ என்ற செய்தியை வழங்குகிறது.*7 வீரன் இடது கையில் வில்பிடித்தும், வலது கையில் வாள் ஏந்தியும், மார்பு தொடைகளில் அம்புகள் பாய்ந்து வீரமரணமடைத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட கல், இன்று விறகுக்கட்டுகளுக்கு முட்டுக்கல்லாகி உள்ளது.

இவ்விடத்தில் இருந்த மூன்று நடுகற்கள் கிருஷ்ணகிரி, அரசு அருங்காட்சியம் அமைக்கும்பொழுது எடுத்துச் செல்லப்பட்டு அங்கே நல்லமுறையில் பாதுகாப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏனோ தெரியவில்லை, இவ்விரு கற்களை புறக்கணித்துவிட்டனர். தீப்பாய்ந்தான் என்ற ஒரு பண்பாட்டினை விளங்கும் இந்த ஒரே சான்றை காப்பாற்றுவது காலத்தின் கட்டாயமல்ல. துறைசார்ந்தோரின் கடமையும்கூட.

*

(கள ஆய்வின்பொழுது உடனிருந்து உதவிய உதவிப் பேராசிரியர்கள் சு. விஷ்வபாரதி, வரலாற்றுத் துறை மற்றும் எம். சத்தியமூர்த்தி, தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்).

***

தீப்பாய்ந்தான் கல் - காத்தாடிக்குப்பம்

வழிபடும் சிற்றுருவங்கள், தீப்பாய்ந்தான் கல் - காத்தாடிக்குப்பம்

தீப்பாய்ந்தான் கல் கல்வெட்டு - காத்தாடிக்குப்பம்

செட்டிவீரன் நடுகல் - காத்தாடிக்குப்பம்

நடுகற்களின் தற்போதைய நிலையும், பயன்பாடும்

*

மேற்கோள் குறிப்பு

1. த. பார்த்திபன், 2009, ‘நடுகற்களின் பெண்கள்: சமூகமும் நம்பிக்கைகளும் - சிற்பங்களை முன்வைத்து’, கட்டுரை, ப.1.

2. முனைவர் சீதாராம் குருமூர்த்தி, 2007, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், சென்னை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ப.16. த.நா.தொ.து.தொடர் எண் 131 / 1973.

3. Dr. Rajan.K, (2000), op.cit, p.89, & EC, VI.43

4. Ibid., p.79.

5. Ibid., p.79-80

6. முனைவர். சீதாராம் குருமூர்த்தி, மு,கு.நூ. ப.16. த.நா.தொ.து.தொடர், எண் 131 / 1973.

7. மே.கு.நூ. ப.17. த.நா.தொ.து.தொடர் எண் 132 / 1973.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com