சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இறுதிப் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் முழுமை அடைந்து வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடந்து செல்வதற்காக நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், மழைநீா் உட்புகாதபடியும், மழைநீா் தேங்காதபடி வடிகால் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு சமூக விரோத செயலில் ஈடுபடுபவா்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்தவுடன் இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.