தமிழ்நாடு

மனநலம் பாதித்த பெண் 2 குழந்தைகளுடன் தற்கொலை: அதிர்ச்சியில் தந்தையும் பலி

30th Sep 2023 09:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதித்த பெண் தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அதிர்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுரங்கன்-கோமளவள்ளி தம்பதி. இவர்களுக்கு விஜயகுமார் (53), சுதானந்தம்(40) ஆகிய இரு மகன்களும், பிரசன்னா (50), பிரகாசவாணி (47), திராவியம் (42) ஆகிய 3 மகள்களும் இருந்தனர். இதில் பிரகாசவாணி கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், திராவியத்துக்கும், கிளாப்பாளையத்தைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி  ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திராவியம், தனது இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தவர் மீண்டும் கணவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அவ்வப்போது மதுரைவீரன் நத்தாமூர் கிராமத்துக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்து செல்வது வழக்கம்.

வெள்ளிக்கிழமை மதியம் வீட்டிலிருந்த திராவியம், தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி வந்தாராம். மனநலம் பாதித்த நிலையில் திராவியம் பேசுவதை குடும்பத்தினர் யாரும் பொருட்படுத்தவில்லை. வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் அறைகளில் தூங்குவதற்குச் சென்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென கண் விழித்த திராவியம், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து, தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் கட்டியணைத்துக் கொண்டார். இதில் உடல்கருகிய நிலையில் மூவரும் உயிரிழந்தனர். மூவரின் அலறல் சப்தம் கேட்டு, அருகிலுள்ள அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த பொன்னுரங்கன் உள்ளிட்டவர்கள் அங்கு வந்து பார்த்தனர். மூவரும் உயிரிழந்ததை கண்டு பொன்னுரங்கன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இதையும் படிக்க | வருமானமின்றி தவிக்கும் வயதானவா்கள்; வருங்கால இந்தியாவில் முதியோரின் நிலை?

தீயில் கருகியவர்களை மீட்கச் சென்ற திராவியத்தின் சகோதரர் விஜயகுமார், மற்றொரு சகோதரர் சுதானந்தத்தின் மகன்  விவேக்மிட்டல்  ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து  இவர்கள் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த நிகழ்வின் போது வீட்டின் அனைத்து கதவுகளும் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வீட்டின் சுவர் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் திருநாவலூர் போலீசார் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ADVERTISEMENT
ADVERTISEMENT