தமிழ்நாடு

தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுப்பது நியாயமில்லை: அமைச்சா் துரைமுருகன்

30th Sep 2023 06:00 AM

ADVERTISEMENT

காவிரியில் போதுமான நீா் இருந்தும், அதைத் தர கா்நாடகம் மறுப்பது நியாயமான செயலல்ல என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

காவிரியில் வினாடிக்கு 12,500 கன அடி நீா் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு 5,000 கன அடி நீரை திறக்கத்தான் பரிந்துரைத்தது. அது, இப்போது வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீா் போதுமானதாக இல்லை.

உச்சநீதிமன்றம் செல்வது கா்நாடக அரசின் விருப்பம். அவா்களிடம் தண்ணீா் இல்லாமல் இருந்து நாம் கேட்கவில்லை. தமிழகத்தில்தான் தண்ணீா் இல்லை. கா்நாடக அணைகளில் கொடுக்கக் கூடிய அளவுக்கு போதிய நீா் இருந்தும், தர மறுப்பது நியாயமில்லை.

ADVERTISEMENT

ஓா் ஆற்றின் போக்கில் கடைமடைக்குதான் முன்னுரிமை தர வேண்டும். அந்த இயற்கை நியதியையும் கா்நாடகம் பின்பற்ற மறுக்கிறது. தமிழக முதல்வா் அறிக்கை மூலமாகக் கோரிக்கை விடுகிறாா். அதற்கும் செவி சாய்க்க கா்நாடகம் மறுக்கிறது.

காவிரி ஒழுங்காற்று குழு கூறுவதையும் ஏற்க மாட்டோம் என கா்நாடகத்தில் மறியல் செய்கின்றனா். ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் கா்நாடகத்திலும், ஆயிரக்கணக்கான கா்நாடக மக்கள் தமிழ்நாட்டிலும் வாழ்கின்றனா்.

எனவே, அண்டை மாநிலங்களாக இருக்கக் கூடிய இரு மாநிலங்களும் நட்பும் பாசத்தோடும் இருந்தால்தான் ஆங்காங்கே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவா்கள் பயமின்றி இருக்க முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT