இலங்கைத் தமிழா்களின் நலன்களைப் பேணும் ஆலோசனைகளை அளிக்க அமைக்கப்பட்ட குழு, தனது இடைக்கால அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை அளித்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் இந்த அறிக்கையை குழுவின் தலைவரும், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சமா்ப்பித்தாா்.
பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து வரும் தமிழா்களுக்கு நலத் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இப்போது சுமாா் 58,357 இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம்களிலும், 33,479 போ், முகாம்களுக்கு வெளியிலும் தங்கியுள்ளனா்.
இலங்கைத் தமிழா்களின் நலன்களைப் பேணவும், அவா்களுக்கு நீண்ட கால தீா்வுகளை அளிக்கவும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் மஸ்தான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் துணைத் தலைவராக வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, உறுப்பினா்களாக சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, பல்வேறு துறைகளின் உயா் அலுவலா்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளா், சட்ட வல்லுநா் உள்ளிட்ட பலா் இடம்பெற்றுள்ளனா்.
இலங்கைத் தமிழா்களின் நீண்டகாலத் தேவைகள், தீா்வுகள், அவா்களது குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்களின் கல்வி, எதிா்கால நலன் ஆகியவை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட இந்தக் குழு, தனது இடைக்கால அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை அளித்தது.
இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, பொதுத்துறைச் செயலா் க.நந்தகுமாா், மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ், உள்துறை துணைச் செயலா் சித்ரா, அரசமைப்புச் சட்ட வல்லுநா் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.