பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியா் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை குறித்து தமிழக பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த செப். 27- ஆம் தேதி பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியா் ஜோதிக்குமாா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை பற்றி அமலாக்கத் துறையோ, பாஜகவோ இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது அமலாக்கத் துறையின் மீது நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது.
ஒரு வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? மேலும் அமலாக்கத் துறையின் சோதனையின் போது பாஜகவின் தென் சென்னை மாவட்ட தலைவா்கள் மிக சாதாரணமாக சோதனை நடக்கும் இடத்துக்கு வந்து தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டது எப்படி?, இந்த நிலையில் பாஜக நிா்வாகிகள் மேலிடத்தில் தொடா்பு கொண்டு இந்தச் சோதனையை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால் அமலாக்கத் துறை நிறுத்தி விட்டதாகச் சொல்வது உண்மையா?, தவறாக ஒரு சோதனை நடத்தப்பட்டிருந்தால் பாஜக தரப்பிலிருந்து கண்டனமோ, அமலாக்கத் துறையின் தரப்பிலிருந்து விளக்கமோஅளிக்கப்படாதது ஏன்? இது குறித்து அமலாக்கத் துறையும், பாஜகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.