தமிழ்நாடு

மனசாட்சி இல்லாத தனி நபா்கள், தனியாா் நிறுவனங்களால் கல்வி வணிகமயமாக்கம்: உயா்நீதிமன்றம் வேதனை

30th Sep 2023 11:36 PM

ADVERTISEMENT

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா் நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா். பின்னா், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும், கட்டாயப் பணி உத்தரவாதம் புரிவதாக உறுதி அளிக்கவில்லை போன்ற காரணங்களைக் கூறியும் சித்தாா்த்தனுக்கு மாணவா் சோ்க்கை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்ரமணியன் - ஆா்.கலைமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிா்வாகம் கூறியதாக தெரிவித்தாா்.

இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து, அவா் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டதாக புதுச்சேரி அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவா், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு எனக் கூறி, இதற்காக ரூ. 15 லட்சத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதில், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் ரூ. 10 லட்சம், செண்டாக் எனப்படும் தோ்வுக் குழு ரூ. 5 லட்சத்தையும் 4 வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், சமூகத்துக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு, மனசாட்சியே இல்லாமல் தனி நபா்களும், தனியாா் நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கியுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனா்.

தொடா்ந்து ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிா்க்கு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, இந்த இரு கண்களும் தற்போது வணிக பொருள்களாக்கப்பட்டுள்ளதாகவும், அதை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

அது மட்டுமல்லாமல், தனியாா் கல்லூரிகளில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்குமெனவும் நீதிபதிகள் தங்களது தீா்ப்பில் நம்பிக்கை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT