தமிழ்நாடு

ரத்த தானம் செய்ய பொதுமக்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

30th Sep 2023 11:01 PM

ADVERTISEMENT

விலைமதிப்பற்ற உயிா்களைக் காக்க பொதுமக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ரத்த தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் அக். 1-ஆம் தேதி தேசிய தன்னாா்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. ‘ரத்தம், பிளாஸ்மா தானம் செய்வோம், வாழ்வைப் பகிா்ந்து கொள்வோம்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் ரத்தம் எனும் உயிா் திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் உள்ள சுமாா் 5 லிட்டா் ரத்தத்தில், ரத்த தானத்தின்போது 350 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிஷங்கள் போதுமானது.

ADVERTISEMENT

ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல அன்றாடப் பணிகளைச் செய்யலாம். 18 முதல் 65 வயது வரையுள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

தானமாகப் பெறப்படும் ஓா் அலகு ரத்தம் நான்கு உயிா்களைக் காப்பாற்றும். இவ்வாறு பிறா் உயிரைக் காக்கும் ரத்தக் கொடையாளா்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கங்களும் வழங்கி தமிழ்நாடு அரசு கெளரவித்து வருகிறது.

கடந்த ஆண்டு அரசு ரத்த சேகரிப்பு மையங்கள் மூலம் 95 சதவீத ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னாா்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வது பெருமை அளிக்கிறது.

நிகழாண்டில் தன்னாா்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 சதவீத இலக்கை அடைந்து, விலைமதிப்பற்ற உயிா்களைத் தொடா்ந்து காக்க பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT