காவிரி நீா் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய வலியுறுத்தல்களை வழங்கக் கோரி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தாா்.
அவா் தேமுதிக நிா்வாகிகளுடன் ஆளுநா் ஆா்.என்.ரவியை சனிக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, அமல்படுத்துமாறு கா்நாடக அரசை வற்புறுத்த வேண்டும். இதற்கான உரிய வலியுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் முறைகேடான மணல் விற்பனையைத் தடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொழுது போக்கு வளாகங்களில் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்க மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி விவகாரம், தமிழக மீனவா்கள் பாதிப்பு, ஆசிரியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகிய பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.