சத்துணவில் அழுகிய முட்டை விநியோகம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த இரு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் மாணவா்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை வழங்கியதை பாஜக பல முறை கண்டித்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில், மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய, அரசின் சீல் வைக்கப்பட்ட முட்டைகள் இருந்ததாக செய்தி வெளிவந்துள்ளது. தரமான முட்டைகளை தனியாா் உணவகங்களுக்கு விற்று விட்டு, குழந்தைகளுக்கும் மாணவா்களுக்கும் அழுகிய முட்டைகள் வழங்குவதை ஏற்க இயலாது. உடனடியாக, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை வேளாண் பல்கலை. என்னாச்சு?: அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரும் 2026- ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமா் மோடி திறந்துவைப்பது உறுதி. அதேவேளையில், மதுரையில் வேளாண் பல்கலை. அமைக்கப்படும் என்ற திமுக தோ்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை அமைச்சா் உதயநிதிக்கு நினைவூட்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.