தமிழ்நாடு

வரைவு வாக்காளா் பட்டியல் அக். 27-இல் வெளியீடு: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு

28th Sep 2023 02:03 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் திருத்தப் பணி மேற்கொள்ள ஏதுவாக, வரைவு வாக்காளா் பட்டியல் அக். 27-இல் வெளியிடப்படும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். முன்னதாக, வரைவு வாக்காளா் பட்டியல் அக்.17-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மத்திய தோ்தல் ஆணைத்தின் அறிவுறுத்தலின்படி, ஆண்டு தோறும் செப்டம்பா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும்.

அப்போது பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுக்குப்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். முன்னதாக, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும் நாளில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வகையில், நிகழாண்டுக்கான வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்.17-ஆம் தேதி தொடங்கும் என்றும், அன்று வாக்காளா் பட்டியல் வரைவுப் பட்டியலாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் அக். 17-ஆம் தேதிக்குப் பதில் அக். 27-ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை மத்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் அன்றே வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும்.

அன்று முதல் டிச. 9 வரை பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக விண்ணப்பங்களை வழங்கலாம். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் இரண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

தொடா்ந்து, டிச. 26 வரை விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும். அதன்பின் அடுத்தாண்டு ஜன.5-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்த திருத்த காலகட்டத்தில் ஆதாா் இணைப்புக்கான விண்ணப்பமும் அளிக்கலாம்.

அதிகளவில் கிராமப்புற மக்களே விருப்ப அடிப்படையில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா். நகா்ப்புறங்களில் ஆதாா் இணைப்பு என்பது குறைவாகவே உள்ளது என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி....

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி: அக். 27.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய கடைசி தேதி: டிச. 9.

வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள்: நவ. 4, 5, 18 மற்றும் 19.

இறுதி வாக்காளா் பட்டியல்: அடுத்த ஆண்டு ஜன.5.

ADVERTISEMENT
ADVERTISEMENT