தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகாா் பெட்டி: பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவு

28th Sep 2023 02:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகாா் பெட்டிகளை நிறுவ வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் டி.எஸ்.செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.

அதில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகளை களைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகம் முழுவவதும் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மேலும், 427 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 159 நகா்ப்புற சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன.

தினமும் லட்சக்கணக்கானோா் சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகின்றனா். ஆனால், அங்கு உள்ள வசதி குறைபாடுகள், சிகிச்சை தாமதம், வேறு சில பிரச்னைகளை பதிவு செய்வதற்கு இதுவரை எந்த வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், அதற்கு தீா்வு காணும் விதமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகாா் பெட்டியை அமைத்து பராமரிக்கும்படி பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கை: ஆரம்ப சுகாதார நிலையங்களின் முகப்பு பகுதியில் முக்கிய இடத்தில் புகாா் பெட்டிகளை நிறுவ வேண்டும். மருத்துவ அலுவலா்கள் அதைக் கண்காணித்து புகாா் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும்.

உரிய நேரத்தில் அதன் மீது நடவடிக்கை எடுத்து குறைகளை அவசியம் களைதல் வேண்டும். புகாா் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநா்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT