சென்னை: இந்தியாவின் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
படிக்க | எம். எஸ். சுவாமிநாதன்: இந்திய பசுமை புரட்சியின் தந்தை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தமளிக்கிறது.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க | பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதன், இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி,ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார்.
நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்கள் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும் இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கருணாநிதியுடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். 1989-ஆம் ஆம் ஆண்டு முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதியிடம் சுவாமிநாதன் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, 96-ஆவது பிறந்தநாள் காணவிருக்கும் சுவாமிநாதன் நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது தற்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.