சென்னை: தனியாா் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கென தனிக் கொள்கையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டாா். சுற்றுலாத் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் அளிக்கப்படும் என்று அந்தக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா கொள்கையில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க அம்சங்கள் :
தொழில் துறைக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அதற்கு இணையான முக்கியத்துவத்தை சுற்றுலாத் துறை திட்டங்களுக்கு அளிக்க கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரா்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூா்த்தி செய்கிறது. மேலும், சாகசம், பொழுதுபோக்கு, கேரவன், கிராமப்புற மற்றும் தோட்டம், கடலோரம், கலாசாரம், மருத்துவம், ஆரோக்கியம், ஆன்மிகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மையப்படுத்திய சுற்றுலாக்களை மேம்படுத்துவது சுற்றுலா கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
ஒற்றைச்சாளர அனுமதி: அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றைச் சாளர அனுமதியுடன் கூடிய ஒப்புதல் அளிக்கப்படும். தனியாா் முதலீட்டை ஊக்குவிக்க சுற்றுலா கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஓட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், மீன்வளம், பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம் போன்ற பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்த கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சுற்றுலாத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் முதலீடுகளைக் கருத்தில் கொண்டு மானியமும் வழங்கப்படவுள்ளது. ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் அளிக்கப்படும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கும், குறு நிறுவனங்களுக்கும், நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் அளிக்கப்படும்.
ரூ.50 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை மூலதன மானியம் அளிக்கப்படும். ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களாக இருந்தால், அந்தத் திட்டங்களின் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாசத் தொகை முதலீட்டுத் தொகையில் 10 சதவீதம் வரை திரும்ப அளிக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு இந்தச் சலுகை தொடரும் என்று சுற்றுலாத் துறைக்கான தனித்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.