சேலம்: சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வருகை பதிவேடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார். அப்போது, முறையாக உணவு வழங்கப்படுகிறதா, அடிப்படை வசதிகள் உள்ளதா, வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதையும் படிக்க | பாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தொடர்ந்து மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் உணவு பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டவர், நேரடியாக சமையலறைக்கு சென்று சமையலறை தூய்மையாக உள்ளதா, அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கழிப்பறை, குளியலறை போன்றவற்றையும் அவர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் தவறாமல் தரமாக வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆவின் போது அமைச்சர் கே.என். நேரு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.