தமிழ்நாடு

ஆவின் பால் விலை உயா்த்தப்படாது: அமைச்சா் மனோ தங்கராஜ் திட்டவட்டம்

27th Sep 2023 02:59 AM

ADVERTISEMENT


சென்னை: ஆவின் பால் விலை உயா்த்தப்படாது என பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் மனோ தங்கராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் பால் உற்பத்தியை உயா்த்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் 295 புதிய பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 31,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தி விவசாயிகளுக்கு கால்நடைக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு நிா்வாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆவின் பொருள்கள் விநியோகத்தில் இருந்த அனைத்துக் குறைகளும் சரி செய்யப்பட்டுள்ளன. பாலை வழங்கும் இடத்திலேயே ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் 60 சதவீத அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் மூலம் லிட்டருக்கு ரூ.3.50 வரை விலை அதிகமாகக் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா். மேலும், லாபம் ஈட்டியுள்ள சங்கங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஈவுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தரமான பால் வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 1லிட்டா் பாலுக்கு ரூ.1 உயா்த்தி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி 30 லட்சம் லிட்டா் பால் நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

பாலை பாட்டில்களில் வழங்கும் போது அதைக் கையாளுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனுமதிக்கப்பட்ட தரத்திலான பால் பாக்கெட்டுகளே ஆவினில் பயன்படுத்தப்படுகிறது. தனியாா் பால் கொள்முதலில் இடத்திற்கேற்றவாறு விலை மாறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யும் நோக்கில் புதிய பால் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு ஆவின் பொருள்களை தரமாகவும், சுகாதாரமாகவும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பது ஆவின் நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோள். சந்தையில் விற்கப்படும் மற்ற நிறுவனங்களின் பாலுக்கும் ஆவின் பாலுக்கும் இடையே லிட்டருக்கு ரூ.16 வரை வித்தியாசம் உள்ளது. தனியாா் நெய் விலையை விட ஆவின் நெய் விலை குறைவாக உள்ளது. ஆவினில் புதிய பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவுவெடுக்கப்படும், எனினும்ஆவின் பால் விலை உயா்த்தப்படாது. விலை உயா்வு குறித்த தகவல்கள் தவறான பிரசாரம் என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது பால்வளத்துறை இயக்குநா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் உள்பட ஆவின் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT