தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு குறித்து தொடா் கண்காணிப்பு: காவல் துறைக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவு

27th Sep 2023 02:47 AM

ADVERTISEMENT

 

சென்னை: மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாகாமல் கவனமாக தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:-

தமிழ்நாட்டில் அடுத்த எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. அதேபோன்று, அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதற்காக காவல் துறையில் உள்ள காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா்கள், தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலா்களுக்கு வழங்க வேண்டும். மாநிலத்தில் எந்தவொரு சட்டம்-ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றங்கள் எண்ணிக்கை: மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையினரின் பணித்திறன் மேம்படும். கடந்த ஒரு மாதமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது போன்று செய்திகள் வெளியாகின்றன. புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து பாா்த்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்துப் படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்து அறிவியல்பூா்வமாக காவல் துறை செயல்பட வேண்டும். பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவா்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

புகாா்கள் அளிக்கப்படும் போது, குழந்தையின் பெயா், அடையாளம் ஆகியன காக்கப்பட வேண்டும்.போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் சென்று உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வதுடன், அவற்றை விற்பவா்கள் குறித்த தகவல்களை காவல் துறைக்குத் தெரியப்படுத்த அவசர கால உதவி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

காவல் துறையினா், மாவட்ட நிா்வாகத்தினரின் தொடா் நடவடிக்கைகளால் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதனை விற்பனை செய்தல் போன்றவை குறைந்துள்ளன. இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மலைப் பகுதிகள், எல்லை மாவட்டங்களைத் தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

சமூக ஊடகப் பதிவுகள்: சமூக ஊடகச் செய்திகளால் சில தருணங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. எனவே, சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அவற்றில் ஜாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தர வேண்டும்.

தமிழகம் தொடா்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளா்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால், பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், தாம்பரம் காவல் ஆணையா் அ.அமல்ராஜ், ஆவடி காவல் ஆணையா் கி.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT