சென்னை: தமிழகத்தில் 37 மாவட்டங்களில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட ஆயிரம் புதிய வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக இந்த புதிய கட்டமைப்புகளை அவா் தொடங்கி வைத்தாா்.
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்தத் திட்டம், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேலூா் மாவட்டம் காட்பாடியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
அதன் தொடா்ச்சியாக, கடந்த 8 மாதங்களில் ரூ.150 கோடி செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள இந்த வகுப்பறைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்தக் கட்டடங்கள் அனைத்தும் உயா்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவா் ஓவியங்கள் போன்றவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகள்: ஊராட்சிகள் பராமரிக்கும் கணக்குப் பணிகளை எளிமையாக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகள் 11 வகையான கணக்குகளை பராமரித்து வருவது கடினமான செயலாக உள்ளது. அதனை எளிமைப்படுத்தும் விதமாக ஊராட்சிகள் இனி மூன்று கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்தியன் வங்கியுடன் இணைந்து தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதன்மூலம், கிராம ஊராட்சித் தலைவா்கள் ஊராட்சிகளின் கணக்கு விவரங்களை அறிய வங்கி அலுவலரைச் சாா்ந்து இருப்பது குறையும். ஊராட்சிக்குத் தேவையான பணிகள் நிதி இருப்புக்கு ஏற்ப உடனடியாக மேற்கொள்ளவும், நிதிப் பரிவா்த்தனைகளை உடனுக்குடன் அறியவும் முடியும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், அமைச்சா் இ.பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் எம்.கே.பஜாஜ், மாநில தகவலியல் அலுவலா் சி.ஜே.அந்தோணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.