தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது கத்தி முனையில் மீண்டும் தாக்குதல்!

26th Sep 2023 11:59 AM

ADVERTISEMENT

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் கத்தி முனையில் நாகை மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கோவிந்தசாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த  24 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன் பிடிக்க ஹரி கிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி, சக்தி பாலன் உள்ளிட்ட 5 மீன்வர்கள் சென்றுள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில்  கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 2 அதிவேக படகில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். 

ADVERTISEMENT

கத்தி முனையில் அவர்களை மிரட்டி 550 கிலோ வலை, ரூ.50,000 மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். 

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், சுதந்திரமாக இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: கார் இயங்காத நாள்: பைக்கில் சென்ற ஹரியாணா முதல்வர்!

நேற்று முன்தினம் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடல் கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT