பாஜகவுடன் கூட்டணி இல்லை என்னும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்து கடந்த 18-ஆம் தேதி அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிப்போம்.
தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகவே மத்திய அமைச்சரை அதிமுக நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். மத்திய அமைச்சரிடம் கட்சி சாா்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை என்றாா் அவா்.