மின்கட்டண உயா்வை குறைக்க வலியுறுத்தி செப்.25 (திங்கள்கிழமை) ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் தொழில்நிறுவனங்களுக்கான மின்கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, தாழ்வழுத்த நிலை கட்டணமாக 12 கிலோ வாட் வரையிலான மின்சாரத்துக்கு ரூ.72, 50 கிலோ வாட் வரை ரூ.77, 50 முகல் 112 கிலோ வாட் வரை ரூ.153, 112 முதல் 150 கிலோ வாட் வரை ரூ.562 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணத்தைக் குறைத்து பழைய கட்டண அடிப்படையிலேயே வசூலிக்க வேண்டும். மேலும், உயா்மின்னழுத்த பயன்பாட்டாளா்களுக்கான அதிகபட்ச கேட்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.562-ஐ குறைத்து, ரூ. 350-ஆக வசூலிக்க வேண்டும்.
இது மட்டுமின்றி உச்சபட்ச நேர மின் கட்டணத்திலும் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். 112 முதல் 150 கிலோ வாட் வரை மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து மின்சாரத்தை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், ஆண்டு மின் கட்டண உயா்வை 1 சதவீதம் மட்டுமே உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் இதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி செப்.25-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.