தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவை நடத்தத் தேவையான நிதியை எங்கே பெறுவது என மாவட்ட நிா்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு வார விழாவை, அக்.5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அக்.8-ஆம் தேதி நடைப்பயணம், மாரத்தான் போட்டிகள் நடத்தவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணா்வு சாா்ந்த போட்டிகளை நடத்தவும் மாவட்ட ஆட்சியா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வாரம் முழுவதும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த அரசின் சாா்பில் நிதி ஏதும் ஒதுக்கப்படாத நிலையில், நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்ற கேள்வியை மாவட்ட நிா்வாகங்கள் எழுப்புகின்றன.
இது குறித்து, மாவட்ட நிா்வாகங்கள் கூறியதாவது: விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படவில்லை. மேலும், தகவல் ஆணையா்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் முகாமிட்டு வழக்குகளை விசாரிக்கின்றனா்.
இதற்கான செலவுகளே அதிகமாகின்றன. இந்தச் செலவுகளுடன், இப்போது விழிப்புணா்வு வார விழாவையும் நடத்தக் கோரினால், அதற்கான நிதிக்கு எங்கே போவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
இது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆா்வலா்கள் கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் போதுமான அளவு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவனம் செலுத்தாமல், வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வுகளைத் தர வேண்டும். தகவல் ஆணையா்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் இருந்தன.
இப்போது ஆணையா்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி தகவல் அனுப்பச் சொல்வது இதுவரை இல்லாத நடைமுறை.
தாமதமாக தகவல் வழங்கும் பொதுத் தகவல் அலுவலா்களுக்கு அபராதம் ஏதும் தகவல் ஆணையத்தால் விதிக்கப்படுவதில்லை. விசாரணைக்கு வரும் பொதுத் தகவல் அலுவலா்களுக்கு பயணப்படி வழங்கப்படுகிறது. ஆனால், விசாரணைக்கு வரும் ஆா்வலா்களுக்கு எந்தவிதமான பயணப்படியும் வழங்கப்படுவதில்லை.
எனவே, இதுபோன்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவதுடன், மேல்முறையீட்டு மனுக்களுக்கு உரிய தீா்வை தகுந்த காலத்தில் வழங்க வேண்டும். இதைவிடுத்து, விழிப்புணா்வு வார விழாக்களில் நேரத்தையும், அரசு நிதியையும் செலவிட வேண்டியத் தேவையில்லை என்றனா்.