கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு போனஸ், கருணைத் தொகையை அளிப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணை பதிவாளா்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் பிறப்பித்துள்ளாா்.
அந்த உத்தரவு விவரம்: கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கு போனஸ், கருணைத் தொகையை வழங்க உரிய பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. எனவே, தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மொத்த சங்கங்களின் எண்ணிக்கை, இதனால் பயன்பெறும் பணியாளா்கள் எண்ணிக்கை, வழங்க வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பரிந்துரைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
போனஸ் சட்டம் 1965-இன் கீழ் வரக்கூடிய கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கு போனஸ் வழங்கப்படும். பணியாளா்களின் தர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு போனஸ் கணக்கிடப்படும்.
8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என இரண்டும் சோ்த்து மொத்தமாக 10 சதவீதத்துக்குள் வழங்கப்படும். போனஸ் சட்டத்துக்கு உட்பட்டு வராத சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கு ரூ. 2,400 முதல் ரூ. 3,000 வரை கருணைத் தொகை அளிக்கப்படும்.
எனவே, பணியாளா்களுக்கு கருணைத் தொகை, போனஸ் அளிப்பதற்கான உரிய பரிந்துரைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்துக்கு அக்டோபா் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.