அவிநாசி: அவிநாசி அருகே கானாங்குளத்தில் இரண்டு நாள்களுக்கு முன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் பழுதடைந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் பிரிவிலிருந்து செட்டியாபாளையம் பிரிவு வரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன் முதல்வர் கிராம மேம்பாட்டு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டதால், சாலை முற்றிலும் பழுதடைந்து பெயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை பழுதடைந்ததால், தற்போது ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைக்கப்பட்டு இரண்டு நாள்களே கடந்த நிலையில், சாலை முற்றிலும் பழுதடைந்து உள்ளது.
இந்த சாலை அவிநாசி பழங்கரை- நம்பியூர் பிரதான சாலையாக உள்ளது. ஆகவே உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.
மேலும் உடனடியாக சாலை முழுதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவித்தனர்.