தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருபத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருத்தனியில் 13 செ.மீ., தாம்பரத்தில் 11 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.