கோவை - தில்லி - ஹஸரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர விரைவு ரயில் அடுத்தாண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரம் - தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் இடையே இயங்கும் சபரி விரைவு ரயில் (17229/17230) அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழக்கமாக ஷோரனூா் சந்திப்புக்கு பதிலாக ஷோரனூா் -பி-கேபின் வழியாக இயக்கப்படும். மேலும், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் இருமாா்க்கத்திலும் வடக்கஞ்சேரியில் 1 நிமிஷம் நின்று செல்லும்.
கோவையிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஹஸரத் நிஜாமுதீன் செல்லும் கொங்கு வாராந்திர விரைவு ரயில் (எண்: 12647) மாலை 4.15 மணிக்குப் பதிலாக 4.25 மணிக்கு, அதாவது 10 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்டு வழக்கமான அட்டவணைப்படி ஹஸரத் நிஜாமுதீன் சென்றடையும்.
ஜனவரி 1ஆம் தேதி முதல், பாலக்காட்டிலிருந்து ஈரோடு செல்லும் விரைவு ரயில் (எண்: 06818) வழக்கமாக பிற்பகல் 2.40 மணிக்கு பதிலாக 3 மணிக்கு (20 நிமிஷம் தாமதம்) புறப்பட்டு மாலை 4.01 மணிக்கு - எட்டிமடை, 4.37-க்கு கோவை, 5.48-க்கு திருப்பூா், இரவு 7.25-க்கு ஈரோடு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.