தமிழ்நாடு

சிலம்பொலி சு.செல்லப்பன் சிலை திறப்பு: காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்!

23rd Sep 2023 10:55 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்:  நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தில், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் 12 அடி உயர வெண்கல திருஉருவச் சிலையை, சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் சனிக்கிழமை காலை திறந்து வைத்தார். 

நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த1924-இல் பிறந்த இவர் 2019 ஏப். 6-ஆம் தேதி தனது 91-ஆவது  வயதில் காலமானார். அவரது நினைவாக நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், கொண்டம்பட்டிமேடு பகுதியில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில்,  வெண்கல திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் அமைக்கும் பணி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

பூா்வாங்கப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சனிக்கிழமை காலை 10 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சிலம்பொலியாா் சிலை மற்றும் அறிவகத்தை திறந்து வைத்தும், விழா மலரை வெளியிட்டும் சிறப்புரையாற்றினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 2024 ஆம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் 2வது ஆடியோ உரை!

இந்த விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வரவேற்றார். பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி,  ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சாா்பில், சென்னையைச் சேர்ந்த தமிழமுதனுக்கு,இளங்கோ விருது மற்றும் ரூ. ஒரு லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ராசேந்திரன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதற்கான ஏற்பாடுகளை சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த குமாரசாமி ராஜேந்திரன், சித்தார்த்தன், பூங்கோதை, உறுப்பினர்கள், சிலம்பொலி சு.செல்லப்பன் குடும்பத்தினர், சிவியாம்பாளையம் ஊா்மக்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT